ஹெல்மெட்டை உடைத்து கொண்டு முகத்தை தாக்கிய பவுன்சர் பந்து: நியூசிலாந்து மைதானத்தில் பரபரப்பு!

0
348

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை உடைத்துக் கொண்டு நியூசிலாந்து வீரர் மெக்லகனின் முகத்தில் தாக்கியதால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரை நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களான குப்தில், லாதம் தலா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இதன் பிறகு விக்கெட்டுகள் வரிசையாக விழுந்த நிலையில், நிகோல்ஸ் சிறப்பாக விளையாடி 82 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த நிலையில் 10வது வீரராக களமிறங்கிய மெக்லகன் பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். அப்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் அன்வர் அலி ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசினார்.

அந்த ஓவரின் 5வது பந்தை அவர் பவுன்சராக வீசினார். இந்த பந்தை அடிக்க முயன்ற மெக்லகன் அந்த ஷாட்டை தவறவிட்டார்.

இதனால் அந்த பந்து ஹெல்மட்டை உடைத்துக் கொண்டு அவரது கண்ணில் காயத்தை ஏற்படுத்தியது. அவர் அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்தார்

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பதறியபடி மெக்லகன் அருகே ஓடி வந்தனர். கண்ணில் ஏற்பட்ட வீக்கத்துடன் அவர் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

இந்த சம்பவத்தால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் 2 சிக்சருடன் 18 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து ’ரிட்டையர் ஹட்’டாக வெளியேறினார்.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் தரப்பில், அன்வர் அலி, முகமது அமீர் தலா 3 விக்கெட்டும், முகமது இர்பான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதன் பின்னர் 281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 46 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாபர் அசாம் 62 ஓட்டங்களும், ஹபீஸ் 42 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில், பவுல்ட் 4 விக்கெட்டும், எலியாட் 3 விக்கெட்டும், ஆண்டர்சன், சாண்டர், வில்லியம்சன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் நியூசிலாந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

nz_win_001 nz_win_006 nz_win_007

LEAVE A REPLY