மூன்று மாணவிகளில் ஒருவரின் சடலத்தை பாதுகாக்கும்படி நீதிமன்றம் உத்தரவு!

0
283

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள யோகா மற்றும் நேச்சுரோபதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி அருகே கிணற்றில் விழுந்து இறந்து காணப்பட்ட மூன்று மாணவிகளில் ஒருவரான மோனிஷாவின் சடலத்தைப் பாதுகாக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மாணவி மோனிஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள அவரது தந்தை, சென்னை மருத்துவக் குழுவினரைக் கொண்டு மீண்டுமொருமுறை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, மோனிஷாவின் உடற்கூறு ஆய்வுகளில் முறைப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், மேலும் அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த வாதங்களை ஏற்காத நீதிபதி சுந்தரேஷ், மோனிஷாவின் சடலத்தை வரும் புதன்கிழமை வரை பாதுகாக்கும்படி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக மாணவி மோனிஷாவின் சடலம் பாதுகாக்கப்படும் மருத்துவமனை வளாகத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்கிடையே மாணவி மோனிஷாவின் சடலத்தைத் தவிர அவரோடு இறந்த மற்ற இரண்டு மாணவிகளான சாரண்யா, பிரியங்கா ஆகியோரின் சடலங்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த மாணவிகளின் மரணம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் தமிழகக் காவல்துறையினர், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இன்று கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட கல்லூரியின் அதிபர் என்றும், மற்றொருவர் கல்லூரி உரிமையாளரின் மகன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இந்த மூன்று மாணவிகள், அளவுக்கதிகமான கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்டச் செய்திகள் தெரிவித்தன.

பின்னர் இந்த மரணம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் தரப்பு சந்தேகங்களை முன்வைத்துள்ளதாலும், கல்லூரியின் நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் கூறியுள்ளதாலும் இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தற்போது உருவாகியுள்ளன.

இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சையை போக்குவதற்கு நீதிபதி தலைமையிலான ஒரு நீதி குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக, தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கோருகின்றன.

மாநிலக் கல்வித்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுவதாகவும், மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய அரசாங்கம் அதிகார வர்கத்தினருக்கு துணைபோவதாகவும், சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

-TH-

LEAVE A REPLY