வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு: கைது செய்யவும் கோரிக்கை

0
203

பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆட்சேபிக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்த வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது இன்று டாக்கா கோர்டில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேச பிரிவினைக்காக பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியானதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விவாதமேடை நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, வங்காளதேச விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்தவர்களாக கூறப்படும் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்து வந்துள்ளன. எனவே, இதுதொடர்பான சந்தேகம் வலுத்து வருகின்றது என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான செய்தி வெளியானதும் ஆளும்கட்சியான அவாமி லீக் கட்சியினர் கலிதா ஜியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். பாகிஸ்தான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி, பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உருவாவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்ததை சுட்டிக்காட்டி அவரை ‘பாகிஸ்தானின் கைக்கூலி’ என்று சிலர் விமர்சித்தனர்.

விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்தவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதால் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, டாக்கா பெருநகர தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர்மீது இன்று காலை தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படியும் இவ்வழக்கின் மனுதாரரான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மம்தாசுதின் அஹமத் மெஹெதி கோரிக்கை வைத்துள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 123-வது குற்றப்பிரிவின்கீழ் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் நிரூபணமானால் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு அதிகபட்சமாக, அபராதத்துடன் கூடிய பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY