(Article) சிறுநீரக விற்பனையும் சிறுபிள்ளைத்தனமும்!

0
298

முதலாம் பக்கத்தில் வெளியாகியுள்ள “இலங்கை வைத்தியர்கள் சிறு நீரகத்திருட்டு” எனும் செய்திக்கும் பதினாறாம் பக்கத்திலுள்ள “இலங்கை அரச மருத்துவ சங்கம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகப் போராட்டம்” எனும் செய்திக்கும் இடையே உள்ள தொடர்பு எவ்வளவு என்ற கேள்வி எழுகின்றது.

2012 ம் ஆண்டு வெளியாகிய செய்தி ஏன் மீண்டும் தோண்டப்பட வேண்டும்? சரி இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் மீது இலங்கை அரசாங்கத்துக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் இந்திய அரசாங்கம் ஏன் திடீரென இச்செய்தியை வெளியிட வேண்டும்? இப்போது தான் நீங்கள் வணிகச்செய்திகள் பக்கத்திலுள்ள “இலங்கை இந்திய சேவை பரிமாற்று ஒப்பந்தத்துக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு” என்ற செய்தி சம்பந்தப்பட வேண்டும்.

இதை முற்று முழுதாக விளங்கிக்கொள்ள சில காலம் நாம் பின்னோக்கி நகர வேண்டும். மகிந்த ராஐபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கை மருத்துவ சங்கத்துடன். அவர் மிகச்சிறந்த உறவைப் பேணினார். இவ்வுறவு மருத்துவ சங்கமானது அவரது காலத்தில் எந்தவிதமான வேலை நிறுத்தமும் செய்யவில்லை என்பதிலிருந்து புலப்படும்.

அதுமட்டுமன்றி மருத்துவ சங்கத்தின் சகல கலந்துரையாடல்களும் நேரடியாகவே ஜனாதிபதியுடனேயே நடைபெற்றன. அக்காலத்தில் சுகாதார அமைச்சராயிருந்த மைத்திரிபால மருத்துவ சங்கத்தின் மீது எதுவித அதிகாரமும் கொண்டிருக்கவில்லை. இதை அவரே அவரது பாராளுமன்ற உரையின் போது ஒருமுறை கூறியுள்ளார். மைத்திரிபால பதவிக்கு வந்தவுடன் மருத்துவ சங்கத்தின் மீது அவர் வெறுப்படைய அவருக்கு புதிதாக காரணங்கள் தேவைப்படவில்லை.

வரிவிலக்கு வாகன அனுமதிப்பத்திரத்தை நிறுத்தியதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில். குதித்தார்கள். அரசாங்கத்தரப்பில் வாகன அனுமதிப்பத்திரம் காரணமாக மக்கள் பலத்த நட்டமடைவதாக கூறப்பட்டது. மருத்துவர்கள் தரப்பில், கூறப்பட்ட நியாயங்களாவன,

1.இது அமைச்சர்களுக்கு கிடைப்பது போன்ற தீர்வையற்ற (Duty free) அனுமதிப்பத்திரமல்ல. தீர்வைக்குறைப்பு (Duty concession ) பத்திரம் (65% தீர்வை செலுத்தப்பட வேண்டும்)

2.தமது சமாந்தர சேவையிலுள்ள (சம தரத்திலுள்ள )ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாகனம், சாரதி, எரிபொருட்கள் வழங்கப்படும்போது தமக்கு உள்ள ஒரேயொரு வரப்பிரசாதமான permit நிறுத்தப்பபட்டமையை கண்டித்தனர்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வைத்தியர்களை மக்கள் திட்டித்தீர்த்தனர். இலவசக்கல்வி கற்றவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன, காசுப்பேய்கள் என்றெல்லாம் திட்டித்தீர்த்தனர். அவர்கள் வைத்தியர் அவர்களுக்கு
வழங்கப்பட்ட இலவசக்கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டது என்பதையும் அரச வைத்தியரின் ஆரம்ப அடிப்படை சம்பளம் வெறும் 26120 ரூபாய்கள் தான் என்பதனையும் மறந்திருந்தனர்.

மனதைத்தொட்டு கூறினால் உங்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறைக்கப்பட்டாலோ அல்லது வரப்பிரசாதம் நீக்கப்பட்டாலோ நிச்சயமாக யாராகிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் வைத்திய சங்கம் வேலை நிறுத்தத்தை தோல்வியுடன் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முடித்துக்கொண்டது. (10 வருடங்களுக்கு ஒரு முறை permit வழங்கப்பபடும் என்று கூறப்பட்டு இருந்தாலும் இன்னும் அது உத்தியோகபூர்வமாக்கப்படவில்லை, ஆயினும் அமச்சர்களின் தீர்வையற்ற (100% duty free) permit மீள அளிக்கப்பட்டது. )

ஆனாலும் வைத்திய சங்கம் தொடர்ச்சியாக தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று தரப்படுத்தி முறையாக நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. ஆனால் சுகாதார அமைச்சரின் மகள் முறையானவர் உட்பட உயர்பதவியிலுள்ளவர்கள், பணக்காரர்களின் குழந்தைகள் கற்கும் இடமாக மாலபே கல்லூரி மாறியுள்ளதால் அதை மூடவதோ பொறுப்பேற்பதோ இலகுவான காரியமல்ல. ஆனால் மருத்துவ சங்கமானது விட்டுப்போன மக்களின் நன்மதிப்பை வெல்ல மக்களை அறிவுறுத்த தொடங்கி, துண்டுப்பிரசுரம் மற்றும் மக்கள் சந்திப்பு மூலம் ஓரளவு வெற்றியும் கண்டது.

அரசாங்கம் வைத்தியர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை சரிப்பதன் அத்தியாவசியத்தை நன்கு அறிந்துள்ளது. மக்கள் வைத்தியர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க நேரிடும் என்பது அரசாங்கம் அலட்சியப்படுத்த
வில்லை.

இத்தகைய அரசாங்கம்தான் வைத்தியர்களை தற்போது திருடர்கள் என்று கூறுகிறது. தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரகம் மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 25-30 லட்சம் இலங்கை ரூபாய்கள் செல்லும். இந்திய தனவந்தர்களுக்கு இது பெரிய தொகையல்ல. அதுமட்டுமன்றி இந்தியாவில் இரத்த உறவினர் அற்ற ஒருவருக்கு உயிருள்ள ஒருவர் உடலுறுப்புகளை தானம் செய்வதை தடைசெய்தது இந்திய அரசாங்கம். ஏழை மக்கள் அனைவரும் ஒரு சிறுநீரகத்துடன் வாழ்வதை தடுப்பதற்கான சட்டம் நன்மையானதே.

வறுமை தாண்டவமாடும் நாடான இந்தியாவில் சிறுநீரகத்தை சில ஆயிரங்களுக்கு விற்க மக்கள் தயங்கமாட்டார்கள். சிறுநீரகம் செயலிழந்த இந்திய தனவந்தர்கள் இரகசியமாக சிக்கன சத்திர சிகிச்சை செய்ய சிறந்த இடம் இலங்கை.

இலங்கையில் சிறுநீரக மாற்றத்தை தடுக்க எந்தவிதமான தனிப்பட்ட சட்டங்களுமில்லை. சர்வதேச சட்டங்கள் மட்டுமே!! தனவந்தர் வரும்போதே சிறுநீரகம் வழங்கும் “தாராள மனம்படைத்த” ஏழையையும் அழைத்து வருவார்கள். அவர்களுக்கு 5 இலட்சம் இலங்கை ரூபாய்களை அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பார்கள். இங்கே வந்தவுடன் சிறுநீரகம் வழங்குபவர் தான் மாமன் மச்சான் என்று பொய்யுரைப்பார். ஆனால் அதற்கு தேவையுமில்லை. ஏனெனில் இலங்கையில் உறுப்பு தானம் செய்ய உறவினராக இருக்க தேவையில்லை. உறுப்பு தானம் செய்யும் நபருக்கு செய்யப்படும் சத்திர சிகிச்சை, பின் விளைவுகள் மற்றும் அவரின் சம்மதம் அடங்கிய 92 பக்கம் அடங்கிய விபரக்கோவை அவரது சொந்தமொழியில் வாசிக்கப்பட்டு அவரது ஒப்பம் பெறப்படும். இதன்போது சத்திரசிகிச்சை நிபுணரல்லாத இன்னொரு வைத்தியர், நடுநிலையான இன்னும் இரு நபர்கள் ஒப்பமிடவேண்டும். இவ்வளவு நடந்தும் ஓர் சிறுநீரக மாற்றத்துக்கு வைத்திருக்கு கிடைக்கும் தொகை??? சத்திரசிகிச்சை நிபுணர் 1.25 லட்சம், உணர்வழியியல் நிபுணர் 60000, உதவி சத்திரசிகிச்சை வைத்தியர் 5000. அப்போது மிகுதி 28 லட்சம்?? வைத்தியசாலை மற்றும் மருந்துச் செலவு.

இலங்கையின் அனைத்து தனியார்துறை வைத்தியசாலைகளும் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது. இதில் கொள்ளை இலாபம் அடைபவர்கள் அவர்களே. இலங்கையில் சிறுநீரகமாற்று சிகிச்சை செய்யக்கூடிய வைத்தியர்கள் மிகச்சிலர்தான். இவர்களை தண்டிக்கவேண்டும் என்று கூறுபவர்களின் மனைவியின் தாயின் சிறுநீரகம் செயலிழக்கும் போது சத்திரசிகிச்சையை இந்த வைத்தியர்கள்தான் செய்ய வேண்டும். மைத்திரியோ ராஜிதவோ செய்ய முடியாது.

-M.B.முஹம்மது ஸில்மி,(கிழக்குப் பல்கலைக்கழகம்)

LEAVE A REPLY