பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

0
264

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் முன்னதாக விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை 4-0 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ஞ், வார்னர் களமிறங்கினர். பின்ஞ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வந்த அணித்தலைவர் ஸ்மித் 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பெய்லி 6 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

ஷான் மார்ஷ் (7) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய வார்னர் சதம் கடந்தார். அவர் 113 பந்தில் 3 சிக்சர், 9 பவுண்டரி உட்பட 122 ஓட்டங்கள் எடுத்தார்.

அதே போல் மறுமுனையில் நிதானமாக ஆடிய மிட்செல் மார்ஷ் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். மாத்திவ் வாட் 36 ஓட்டங்களும், பால்க்னர் 1 ஓட்டமும் எடுத்தனர்.

இதனால் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 330 ஓட்டங்கள் குவித்தது.

மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 84 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ஓட்டங்கள் குவித்தார். இவருடன் ஹஸ்டிங்ஸ் (2) களத்தில் இருந்தார்.

இந்திய அணி சார்பில், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா சிறப்பாக பந்துவீசி 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், யாதவ், ரிஸி தவான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் பிறகு 331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக தவான், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தவான் 56 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அவர் 108 பந்தில் 99 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, அணித்தலைவர் டோனி நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றனர்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 318 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த ஓவரை மிட்செல் மார்ஷ் வீசினார்.

முதல் பந்தை சந்தித்த டோனி அதை சிக்சராக விளாசினார். அடுத்த பந்தையும் சிக்சர் விளாச முயற்சித்த டோனி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு குர்கீரட் சிங் களமிறங்கினார்.

கடைசி ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட மணீஷ் பாண்டே அதை பவுண்டரியாக மாற்றி சர்வதேச கிரிக்கெடின் முதல் சதத்தை எடுத்தார். அடுத்த பந்தில் மேலும் 2 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 49.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 331 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ஹஸ்டிங்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலிய 4-1 என கைப்பற்றியது. இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

ஆட்டநாயகனாக மணீஷ் பாண்டேவும், தொடர் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY