எகிப்தில் குண்டுவெடிப்பு 7 போலீசார் உள்பட 10 பேர் பலி

0
84

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புறநகர் பகுதியான கிசாவில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த குடியிருப்பு பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அதை செயலிழக்க செய்ய முற்பட்டனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 7 போலீசார் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். உயிரிழந்த மற்ற 3 பேர் அதே குடியிருப்பு பகுதியில் வசித்துவந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா? பிடிபட்டனரா? என்ற விவரம் தெரியவரவில்லை.

நேற்று முன்தினம், எகிப்தின் வடபகுதியான சினாய் நகரில் உள்ள சோதனைச்சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 5 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY