தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பாதிப்பு – WFP

0
58

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பரிதவித்து வருகின்றனர் என்று ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்பிரிக்கா முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, மடகாஸ்கர், ஷிம்பாப்வே ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அந்த நாடுகளில் வேளாண் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாக மலாவி நாட்டில் 28 லட்சம் பேர், மடகாஸ்கரில் 19 லட்சம் பேர், ஷிம்பாப்வேயில் 15 லட்சம் பேர் உட்பட ஒட்டுமொத்தமாக 1.4 கோடி பேர் பசியால் பரிதவித்து வருவதாக உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இவை தவிர தெற்கு சூடான், எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. எத்தியோப்பியாவில் சுமார் ஒரு கோடி மக்களுக்கு உணவு தேவைப்படுவதாக அந்த நாட்டு சமூக ஆர்வலர்கள் உதவி கோரியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அருகில் உள்ள லெசோத்தோ நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 6.5 லட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY