அவசர மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார் மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்

0
175

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (48) அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று கொழும்பு நகரிலிருந்து லண்ட னுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமின் 30 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, முதன்முறையாக ஜனநாயக முறைப்படி கடந்த 2008-ல் அதிபரானார் நஷீத். 2012-ம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டதால், நஷீதுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார்.

நீதிபதி கைது செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து வரும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக லண்டன் செல்ல விரும்பினார். ஆனால் இதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணநாயகே ஆகியோர் கடந்த வாரம் மாலிக்கு சென்று அந்நாட்டு அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து சில நிபந்தனைகளுடன் நஷீத் லண்டன் செல்ல மாலத்தீவு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நஷீத் சிகிச்சைக்குப் பிறகு நாடு திரும்பி வருவதை உறுதி செய்யும் வகையில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மாலியில் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியது. இதற்கு அவர் முதலில் மறுப்பு தெரிவித்த போதிலும் பின்னர் தனது சகோதரரை உத்தரவாத நபராக நியமிக்க ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தத்திலும் நஷீத் கையெழுத் திட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி கொழும்புக்கு வந்த நஷீத், நேற்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த தகவலை நஷீதின் மாலத்தீவு ஜனநாயக கட்சி செய்தித் தொடர்பாளர் ஹமீத் அப்துல் கபூர் தெரிவித்தார்.

LEAVE A REPLY