கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அன்வர் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்

0
206

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அன்வர் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலையின் நிலைமையை நேரடியாக கண்டறிந்தார். அதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (22.01.2016) இப்பாடசாலைக்கு தனது சொந்த நிதியிலிருந்து தரம் 01 மாணவர்களுக்கான ஒருதொகுதி கதிரை மேசைகளை அன்பளிப்பு செய்தார்.

இவ்விஜயத்தின்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணசபைக்குட்பட்ட எல்லா பாடசாலைகளிலும் தளபாட பற்றாக்குறை என்பது தொடர்ச்சியாக இருந்துவருகின்ற ஓர் பாரிய பிரச்சினையாகும்.

2014ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணசபை வரவுசெலவு திட்ட விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பாக முன்மொழிந்திருந்தோம், இருந்தபோதிலும் இன்று வரை அதற்காக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மாணவர்களின் கல்வி செயற்படுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் அடிப்படை வசதிகளான தளபாடங்கள், வகுப்பபறைகள் என்பன நன்றாக அமைந்திருத்தல் வேண்டும். அந்த வகையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கடந்த காலங்களில் தரம் 1க்கு 60 தொடக்கம் 70 வரையிலான மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள் ஆனால் இம்முறை தரம் 1க்கு 160 மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் சுற்றுவட்டாரத்தில் பல பாடசாலைகள் இருந்தும் கூட அந்த பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததனால் அவ்வாறான பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது இதனால் இந்த பாடசாலையில் 160 மாணவர்கள் தரம் 1க்குள் அனுமதிக்கப்பட்டு ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் வீதம் 4 வகுப்பறைகளில் மாணவர்களை உள்ளடக்கி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையினை இப் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனேக பாடசாலைகளில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுகின்றது. பல மாணவர்கள் தரையிலும், பாய்களிலும் அமர்ந்து தமது ஆரம்ப கல்வியினை கற்கின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் அந்த மாணவர்கள் எழுத்துக்களை சம்பூரணமாக எழுத முடியாத நிலைமையும், அவர்கள் குனிந்து கொண்டு கல்வி செயற்பாடுகளை மேற்கொள்வதனால் அவர்களின் உடல் உபாதைகளுக்கு உட்பட்டு நோய்வாய்ப்படுகின்ற ஓர் நிலை காணப்படுகின்றது.

எனவே இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், இப் பாடாசலையின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குமுரிய நடவடிக்கைகளை உடனடியாக 1 மாத காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சரிடமும், மற்றும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரிடமும் கேட்டுகொள்கின்றேன்.

தற்பொழுது எமது நாட்டில் மக்களால் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சிறந்தமுறையில் நல்லாட்சி நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், மக்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் தமது வாழ்க்கையில் நல்லதோர் சுபீட்சமான நிலைமை ஏற்படவேண்டும் என்று பார்த்திருக்கும் இத் தருணத்தில் இவ்வாறானதொரு நிலைமை கல்விதுறையில் ஏற்பட்டு இருக்கின்றதென்றால் அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எமது நாட்டில் இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த கல்வியினை சிறந்த முறையில் பெற்று அதனூடாக இவர்கள் நல்லதோர் பிரஜைகளாக வருவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இன்று நாங்கள் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேரடியாக இங்குள்ள நிலைமையை அறிந்து கொண்டோம். இப் பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரைக்கும் கிட்டத்தட்ட 800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர், இங்கு தளபாட பற்றாக்குறை காரணமாக பல மாணவர்கள் பாயிலும், தரையிலும், அமர்ந்து கொண்டும் ஒரு மேசையில் 8, 9 மாணவர்கள் அமர்ந்துகொண்டும், மேசையில்லாமல் உடைந்த கதிரைகளிலும், தமது கால்களிலும் அப்பியாச புத்தகங்களை வைத்துக்கொண்டு சிரமத்திற்கு மத்தியில் கல்வியினை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் 800கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலையில் மலசலகூடங்கள் பற்றாக்குறை காரணமாக பாடசாலை சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுகின்றது, எனவே இப்பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் மாகாணசபையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஓர் பிரேரணையை முன்மொழிந்து அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளோம் எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

இந்த பாடசாலையில் தரையில் அமர்ந்து கல்விகற்கும் தரம் 01 மாணவர்களின் கஷ்ட நிலைமையை கருத்திற்கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து அந்த மாணவர்களுக்கான ஒருதொகுதி கதிரை மேசைகளை இன்று அன்பளிப்பு செய்திருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் இவ்வாறான நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கும் துணையாக இருப்போம் என மேலும் தெரிவித்தார்.

மன்சூர் அஹ்மத்

9c61c009-046f-485c-8fc6-02d4feed9b95 407db145-4e36-4d68-8947-bdc1f0f595a7 74742c29-37ba-42d3-bdff-f1b837a5931c a5f5a82a-c67a-44fd-88be-66baafec5db6 f5e36393-fad6-44ee-a9e0-341aca8018a1

LEAVE A REPLY