ஈரான் மீதான பொருளாதாரத் தடையை ஜப்பானும் விலக்கியது!

0
202

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

தன்வசமுள்ள அணு ஆயுதங்களையும், அணு தயாரிப்பு திட்டங்களையும் அழிக்க முதலில் மறுத்த ஈரான், பின்னர் சர்வதேச நெருக்கடிக்கு பணிந்தது. இதையடுத்து, அணு செறிவூட்டல் மற்றும் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக ஈரான் அறிவித்தது.

இதையடுத்து, சர்வதேச அணு ஆயுத தடை முகைமையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஓராண்டு காலம் ஈரானில் முகாமிட்டு அங்குள்ள அணு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினார்கள். மின் உற்பத்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளுக்காக செயல்பட்டுவரும் திட்டங்களை தவிர பிற அணு ஆயுத தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

இதையடுத்து, சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் கையொப்பமிட்டது. அதில் உள்ள நிபந்தனைகளை எல்லாம் எதிர்காலத்தில் முழுமையாக பின்பற்றுவதாகவும் உறுதியளித்தது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த 17-ம் தேதி அறிவித்தன.

இந்நாடுகளை பின்பற்றி உலகின் பலநாடுகளும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டன. ஆனால், சுமார் ஒருவார காலமாக இவ்விவகாரத்தில் அமைதிகாத்துவந்த ஜப்பான் அரசு ஈரான் மீதான பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் அரசின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடா சுகா இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார்.

LEAVE A REPLY