கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தராக கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் நியமனம்

0
215

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெற்றிடத்திற்கு கிழக்குப் பல்கலைக் கழக பேரவை உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட மூவரில் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டு நேற்று (21) வியாழக்கிழமை பிற்பகல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேயகோன் இந்த நியமனத்தை வழங்கி வைத்தார்.

கடந்த 12.12.2015 அன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற கிழக்குப் பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் நியமனத்திற்காக மூவரின் பெயர்கள்; முன்மொழியப்பட்டு சிபார்சு செய்யப்பட்டிருந்தன.

பேரவை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் முதலாவதாகவும். தாவரவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன் இரண்டாவது இடத்திலும், விவசாய பீட பீடாதிபதி கலாநிதி பி. சிவராஜா மூன்றாவது இடத்திலும் முன்மொழியப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பு முடிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் உபவேந்தர் இறுதி நியமனம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிய உபவேந்தர் நியமனம் மூன்றாண்டுகளைக் கொண்டதாக இருக்கும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய முன்னாள் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் பதவிக் காலம் வறிதானதையடுத்து கிழக்குப் பல்கலைக் கழக தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY