அவுஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

0
96

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் முன்னதாக நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ஞ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். வார்னர் 93 ஓட்டங்கள் (12 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்தில் பவுல்ட் ஆனார்.

சிறப்பான தொடக்கம் கொடுத்த பின்ஞ், வார்னர் முதல் விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் குவித்தனர். மறுமுனையில் அசத்திய பின்ஞ் சதம் அடித்தார். அவர் 107 பந்தில் 107 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெய்லி 10 ஓட்டங்களில் நடையை கட்டினார். பால்க்னர் டக்- அவுட் ஆனார். இதன் பின்னர் அணித்தலைவர் ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி காட்டினர்.

ஸ்மித் 29 பந்தில் 51 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 20 பந்தில் 41 ஓட்டங்களும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தனர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் ஆரம்பத்திலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.

சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய ரோஹித் சர்மா 25 பந்தில் 41 ஓட்டங்கள் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

இதனால் ஷிகர் தவான் தனது 9வது சதத்தை விளாசினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய விராட் கோஹ்லி தனது 25வது சதத்தை அடித்தார். தவான் 113 பந்தில் 126 ஓட்டங்கள் (14 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்கள் 2வது விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை குவித்து அசத்தினர். அடுத்து வந்த அணித்தலைவர் டோனி டக்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து மறுமுனையில் இருந்த கோஹ்லியும் ஆட்டமிழந்தார். அவர் 92 பந்தில் 106 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரியத் தொடங்கியது.

குர்கீரட் சிங் (5), ரஹானே (2), ரிஸி தவான் (9), புவனேஷ்வர் குமார் (2), உமேஷ் யாதவ் (2), இஷாந்த் சர்மா (0) என அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியா 49.2 ஓவர்களில் 323 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா (24) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து அவுஸ்திரேலியா 25 ஓட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் 4-0 என உள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளையும், ஹஸ்சிங்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் அசத்திய ரிச்சர்ட்சன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY