பொலிஸ் நிலையக் காணியை அலிகார் தேசியக் கல்லூரிக்குப் பெற்றுக் கொள்வது சம்பந்தமான கலந்துரையாடல்

0
190

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியோடு இணைந்துள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான காணித் துண்டொன்றை அலிகார் தேசியக் கல்லூரிக்கே பெற்றுக் கொள்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி நூற்றாண்டைக் கடந்த ஒரு பாடசாலையாகும் எனினும் சம காலத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் அதிகரிப்பினால் இக்கல்லூரி இடப் பற்றாக் குறையை எதிர் நோக்கியுள்ளது.

மேலும், இந்தத் தேசியக் கல்லூரியோடு இணைந்ததாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் காணித் துண்டொன்று உள்ளது.

இந்தக் காணியில் 1990 ஆம் அமைந்திருந்த பொலிஸ் நிலையம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்ததால் அதனோடு அருகிலிருந்த அலிகார் தேசியக் கல்லூரியும் தாக்கப்பட்டது.

பாடசாலையின் இடநெருக்கடி, அதன் பாதுகாப்பு, அங்கு கல்வி பயிலும் மாணவர்களினதும், கடமை புரியும் ஆசிரியர்களினதும் சௌகரியம் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான காணித்துண்டை அலிகார் தேசியக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் ஏறாவூரின் கல்வி வளர்ச்சியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

ஏ.எச்.ஏ. ஹு ஸைன்

LEAVE A REPLY