கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகம் மட்டக்களப்பில் வேண்டும் : ஷிப்லி பாறூக்

0
225

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கடவுச்சீட்டு வழங்குகின்ற கிளை காரியாலயம் ஒன்று மட்டக்களப்பில் அமையப்பெற வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் ஜனாதிபதி, பிரதம மந்திரி, பொது நிருவாக அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த கால ஆட்சியின் போது மக்களின் நன்மை கருதாது தங்களுடைய அரசியல் இலாபங்களை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஜனாதிபதி உட்பட அனைவரும் செயற்பட்டிருந்தார்கள்.

எனினும் அதனைத் தகர்த்தெறிந்து நல்லாட்சியை மக்கள் கொண்டுவந்தார்கள். அம் மக்களுடைய எதிர்பார்ப்பு நல்லட்சியினூடாக தமது வாழ்க்கை சுபீட்சமடைய வேண்டும் என்பதேயாகும்.

இந்த வகையில் மக்களுடைய எதிர்பார்புக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் முகமாக கிழக்கு மாகாணத்தில் தாங்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுகொள்வதற்கான ஓர் கிளை காரியாலத்தை மட்டக்களப்பில் ஏற்படுத்தி தரவேண்டும்.

இப்பொழுது இருக்கின்ற நடைமுறையின் பிரகாரம் கிழக்கு மாகாண மக்கள் கொழும்புக்குச் சென்றே தங்;களுடைய கடவுச்சீட்டுக்களை பெற வேண்டியுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்.

கடந்த டிசெம்பர் மாதம் கடவுச்சீட்டு பெறுவதற்கென சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பிரயாணம் செய்தவர்கள் அம்பேபுஸ்ஸவில் விபத்துக்குள்ளாகி ஓர் சிறுவன் உட்பட ஆறு பேர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டார்கள்.

கொழும்பு, கண்டி, வவுனியா போன்ற மூன்று இடங்களில் தற்பொழுது கடவுச்சீட்டுக்களை வழங்குகின்ற கிளை காரியாலயங்கள் இருக்கின்றன,

இதனுடன் சேர்ந்து இன்னுமொரு கிளை காரியாலயம் ஒன்றினை கிழக்கு மாகாண மக்களுக்கு அமைத்து தரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மத்திய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் எனவும் ஷிப்லி பாறூக் கேட்டுள்ளார்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY