இன்றைய சமூக நடைமுறை மார்க்க சீர்கேடு

0
433

மணப்பெண் அலங்காரம் பற்றி்:
பருவமங்கையரின் பெற்றோரே!
வாலிப சகோதரர்களே!
பணிவாய் ஓர் வேண்டுகோள்!

திருமணங்களின் போது பரவலாக மணப்பெண்ணை அலங்கரித்து, ஒரு பொம்மையாக பலர்முன் பார்வைக்கு அமர்த்தும் சீரழிந்த கலாச்சாரத்தை தவிர்க்க முயற்சிக்க மாட்டீர்களா?

••• விதிவிலக்காக, மார்க்க வரையரைக்கு உட்பட்டு அழகான வழிகாட்டலிலே நடைபெறும் திருமணங்களும் இல்லாமல் இல்லை.••••
அல்ஹம்துலில்லாஹ்!

சில மணித்தியாலங்கள் அப்பெண், குறிப்பாக அமைதியாக, அடக்கமாக வளர்ந்த பெண்கள் படும்பாடு, தர்மசங்கடமான நிலைகள் இவற்றை எப்போது உணரப்போகின்றீர்கள்?

அத்தனை பேரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை எப்படி அவள் தாக்குப்பிடிக்க முடியும்.?

••• இப்படி சொல்லும் போது….. ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும், அநாகரீகத்தையும் பெரிதும் விரும்பும் சகோதரிகளுக்கு கோபம் வரலாம். ஆனால் அன்பு சகோதரிகளே! புரிந்துகொள்ளுங்கள்!

இவ்வாறான செயல்கள் உங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ துளி நன்மையை கூட பெற்றுத்தர மாட்டாது. நவநாகரீகம் தலைவிரித்தாடும் உலகில் அறிவும் விருத்தியடைந்து கொண்டு தான் போகின்றது. அந்த அறிவையும், மார்க்க அறிவையும் பயன்படுத்தி, சற்று சிந்தித்துப் பாருங்கள்!•••
பெற்றோர்களே!

உங்கள் செல்வச் செழிப்பை காட்டி, உங்கள் பெருமையை பறைசாற்றும் ஓர் உணர்வுகளற்ற ஜடமாக அப்பெண்ணை அவமானப்படுத்த நினைப்பது தவறில்லையா?
அலங்கரிக்க வேண்டாம் என்றோ, விழா எடுக்க வேண்டாம் என்றோ சொல்ல வரவில்லை. அந்நியர் முன் அவளை அரங்கேற்ற வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன்.

இம்முறைகளை மாற்றி, மார்க்க விதிகளை அமுல் படுத்த ஆவன செய்யுங்கள்! அது உங்களால் தான் முடியும்! இன்ஷாஅள்ளாஹ்! மணமகனே! நீங்கள் மணக்கப்போகும் உங்கள் வருங்கால துணையை பத்திரப்படுத்துவது உங்கள் கடமைதானே.

புது மணமகனாய் நீங்கள் அவளிடம் வந்து சேரும் முன்னரே எத்தனை கண்களுக்கு அவள் காட்சிப்பொருளாகின்றாள்? எத்தனை உள்ளங்களை கொள்ளையடிக்கின்றாள்? எத்தனை வாலிப உள்ளங்களுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, இவள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடாதா? என்று ஏங்க வைக்கிறாள். இப்படி ஏங்குபவர்களில் உங்கள் ஆருயிர் நண்பர் கூட இருக்கலாம்.

மணமுடித்த பின்கூட அவன் மனம் உங்கள் மனைவிக்காக ஏங்கலாம். எவ்வளவு பாரதூரமான செயல்கள் பக்கவிளைவுகளை சிந்திக்காமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏன் சகோதரா உங்கள் பொக்கிஷத்தை, நீங்கள் மட்டுமே ரசிக்க வேண்டியவளை ஏலத்தில் விடுகின்றீர்கள்?

நன்றாக சிந்தியுங்கள். நீங்கள் உறுதி எடுத்தால் இவற்றில் மாற்றம் செய்யலாம். இன்ஷாஅள்ளாஹ்! திருமண பேச்சுவார்த்தைகளின் போதே “மணமகளை அலங்கரித்து பகிரங்கமாக அமரவைக்க வேண்டாம்”என்றுகண்டிப்பாக பெண்வீட்டாருக்கு உத்தரவிட உங்களுக்கு உரிமை உள்ளது. ஏனெனில் இனி அவள் உங்களுக்குறியவள். அப்பெண்ணின் கண்ணியத்தை காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. மறந்து விடாதீர்கள்.
சிறிது சிந்தித்துப் பாருங்கள. இப்போதைய சூழலில் சாதாரணமாக எல்லோரிடத்திலும் கெமரா கையடக்க தொலைபேசிகளே வலம்வருகின்றன. இதனால் இவ்வளவு காலமும் அப் பெண் யார் என்று கூட தெரியாதவர்களின் கைபேசிகளுக்குள்ளும் இவளின் அழகிய தோற்றம். இந்த முகத்தை படம் எடுத்தவர்கள் தனியாகவும் பார்த்து ரசிக்கலாம். சமூக வலைத்தளங்களில் கூட பதிவேற்றிவிடலாம்.

இதனால் அந்த அப்பாவிப் பெண்ணுக்கு எவ்வளவு அவமானம். எவ்வளவு பாவம் சேர்ந்து கொண்டு இருக்கும். இதற்கு என்ன காரணம்? அவளை பகிரங்கமாக பார்வைக்கு விட்டது தானே. அந்தப் பாவம் உங்களையும் விட்டுவிடாது. எனவே தயவு செய்து இவ்வநாகரிக நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர நீங்கள் ஒவ்வொருவரும் கங்கனம் கட்டுங்கள். சகோதரர்களே! அள்ளாஹ் உங்கள் வாழ்வை ரஹ்மத்தும் பரகத்தும் நிறைந்ததாக, ஈருலக ஈடேற்றம் பெற்றதாக அமைத்துத் தருவானாக!

ஒவ்வோர் திருமணத்திலும் சம்பந்தப்பட்ட அனைவரும் நல்ல முறையில் சிந்தித்து நடந்தாலே அநாச்சாரங்களையும், அவலங்களையும், அவமானங்களையும் அழித்துவிட முடியும். முயற்சிப்போம்! முடிவு அவன் கையில்! இன்ஷாஅள்ளாஹ்!

LEAVE A REPLY