டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது இளம்பெண் மை வீச்சு!

0
316
அர்விந்த் கேஜ்ரிவால், கருப்பு மை வீசிய பாவனா
அர்விந்த் கேஜ்ரிவால், கருப்பு மை வீசிய பாவனா

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது இளம்பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கருப்பு மையை வீசினார். அந்தப் பெண்ணை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வாகன கட்டுப்பாடு திட்டத்துக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

அப்போது திடீரென மேடை மீது ஏறிய இளம்பெண் ஒருவர், முதல்வரின் முகத்தில் கருப்பு மையை வீசினார். அந்த மையின் சில துளிகள் முதல்வரின் முகம் மற்றும் ‘மைக் ஸ்டாண்ட்’ மீது தெறித்தது.

மை தெளித்த இளம்பெண்ணை போலீஸார் பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் பாவனா என்பதும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சுமார் 7 நிமிடங்கள் விழா நிகழ்ச்சிகள் தடைபட்டன.

வடக்கு டெல்லியில் உள்ள மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் பாவனாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2014 ஏப்ரலில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அர்விந்த் கேஜ்ரிவாலை ஆட்டோ டிரைவர் லாலி என்பவர் கன்னத்தில் அறைந்தது நினைவுகூரத்தக்கது.

(The Hindu)

LEAVE A REPLY