அற்ப விடயங்களுக்காக முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது: சசிதரன்

0
240

அற்ப விடயங்களுக்காக மனித உறவுகளைப் பகைத்துக் கொண்டு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச மத்தியஸ்த சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பற்று மத்தியஸ்த சபையின் ஈராண்டு நிறைவையொட்டி மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது, நீதிமன்றத்தினூடாகவும், பொலிஸ் நிலையத்தினூடாகவும் பொதுமக்களிடமிருந்தும் எமது மத்தியஸ்த சபைக்கு வரும் முறைப்பாடுகளில் அதிகமானவை அற்பப் பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஆனால், தாம் முரண்பட்டுக் கொண்டு அந்தப் பிரச்சினையை பொலிஸ் நிலையத்திற்கோ, நீதி மன்றம் வரையிலோ எடுத்துச் செல்லும் போது அந்தப் பிரச்சினையின் தாற்பரியத்தை அறியாதவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளுக்குள் இருந்து முரண்பாடுகளையும் வன்முறைகளையும் கண்டும் கேட்டும் அனுபவித்தும் பழக்கப்பட்டதில் ஒரு மரத்துப்போன மனநிலை இன்னமும் மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது.

விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, மற்றவரின் கருத்துக்கு மதிப்பளித்தல், உதவும் மனப்பான்மை, தியாக சிந்தை என்பவை தற்கால அவசர இலத்திரனியல் உலகில் மறைந்து வருகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

வீணாக புரிந்துணர்வின்றி, மனித உறவுகளைப் பகைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம், நீதிமன்றம், என்று நாட்கணக்கில் மாதக் கணக்கில் பொருளாதாரத்தையும், பெறுமதியான நேரத்தையும், ஆரோக்கியத்தையும். மன நிம்மதியையும் இழந்து அலைந்து திரிவதில் அக்கறை காட்டும் போக்கு மனிதர்களிடம் மாற வேண்டும்.

மனிதர்களிடத்தில் மட்டுமல்லாது மற்ற ஜீவராசிகளிடத்திலும் மரஞ்செடி கொடிகளிடத்திலும் அன்பு காட்டி வாழும் போது இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.

எமது மத்தியஸ்த சபை மானுட உறவுகளை வளர்க்கவும் பிரச்சினைகளோடு வரும் இரு சாராருக்கும் வெற்றி வெற்றி என்ற இலக்கை அடையவும் வழிகாட்டியிருக்கின்றது.

பிணங்கிக் கொண்டு வருவபர்களை இணங்கிக் கொண்டு செல்ல நாம் உதவியிருக்கின்றோம். வன்முறைக்குப் பதில் நன்முறையே என்பதை நாம் உணர்த்தியிருக்கின்றோம்.

முரண்பாட்டோடு வரும் பலருக்கு நாமே நமது சொந்த நிதியை அவர்களுக்குக் கொடுத்துதவி பணம் மானுட உறவுகளைப் பிரிக்கக் கூடாது என்று விழிப்புணர்வூட்டி இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக மானுடப் பண்பு சிறந்தோங்க வழி காட்டியிருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தன், கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி. மஹலேகம், ஏறாவூர்ப் பற்று பிரதேச மத்தியஸ்த சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன், உப தலைவர் தங்கேஸ்வரி பஞ்சாட்சரம், ஏறாவூர் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமைத்துவ பயிலுநர் ஏரம்பராஜா பிரபானந்தராஜா, தன்னாமுனை கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளரும் மத்தியஸ்த சபை உறுப்பினருமான வி. சிவகுமார் உள்ளிட்டோரும் ஏனைய மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஹுசைன்)

LEAVE A REPLY