மேக்ஸ்வெல் அதிரடியில் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

0
288

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பெர்த் மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் 0-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா, இந்தப் போட்டியிலும் மிரட்டுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.

முதல் 2 போட்டிகளில் சொதப்பிய தவான் இந்தப் போட்டியில் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். கோஹ்லி- தவான் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் குவித்தது.

இதன் பின்னர் வந்த ரஹானே தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். அவர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோஹ்லி தனது 24வது சதத்தை விளாசினார். அவர் 117 பந்தில் 117 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

அணித்தலைவர் டோனி அதிரடியாக 9 பந்தில் 23 ஓட்டங்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். குர்கீரட் சிங் (8) நிலைக்கவில்லை.

இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா (6), ரிஸி தவான் (3) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ஹஸ்டிங்ஸ் 4 விக்கெட்டுகளையும், பால்க்னர், ரிச்சர்ட்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 296 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் ஷான் மார்ஷ் (62) சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பின்ஞ் 21 ஓட்டங்களும், அடுத்து வந்த அணித்தலைவர் ஸ்மித் 41 ஓட்டங்களும் எடுத்தனர். பெய்லி (23) நிலைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது.

இந்த நிலையில் மேக்ஸ்வெல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பாதையை நோக்கி சென்றது.

கடைசி வரை அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 83 பந்தில் 96 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

இதனால் அவுஸ்திரேலியா 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 296 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பால்க்னர் (21), ஹஸ்டிங்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில், உமேஷ், இஷாந்த், ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 3-0 என கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY