அரசியல் இலாபம் தேடுகின்ற ரிஷாட் பதியுத்தீனுடைய மரணத்தருவாய் மிகக் கடினமானதாக இருக்கும்: சுபையிர்

0
300

தன்னை வளர்த்துக்கொள்வதற்காக வடபுல அவலச் சமூகத்தை விற்று அரசியல் இலாபம் தேடுகின்ற ரிஷாட் பதியுத்தீனுடைய மரணத்தருவாய் மிகக் கடினமானதாக இருக்குமெனவும் அவர் இறைவணைப் பயந்துகொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை விடுகை விழா 16.01.2016 சனிக்கிழமை ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ. ஜூனைட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் இறைவனின் நாட்டத்தினால் அரசியலுக்குள் நுழைந்து ஏறாவூர் பிரதேசத்தில் எந்தவொரு அரசியல்வாதியினாலும் செய்ய முடியாத அபிவிருத்திகளை செய்து வரலாறு படைத்துள்ளேன். அண்மையில் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளர் ஓரங்கட்டப்பட்டமை பாரிய துரோகமாகும் என அக்கட்சியினுடைய செயலாளர் வை.எல்.எஸ் தெரிவித்திருந்தார்.

கடந்த பொதுத்தேர்தல் வந்தபோது என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிடலாம் என்று இந்த மாவட்டத்திலுள்ள ஒரு அரசியல்வாதி எனக்கு எதிராக செயற்பட்டு வருகிறார். அவரோடு கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவன் நான்.

குறிப்பாக கல்குடா மண்ணுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு பல பங்களிப்பகளைச் செய்தவன். விசேடமாக சகோதரர் முகைதீன் அப்துல் காதருக்கு எனது ஊரையும்விட்டு சுமார் அறுநூருக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு அனுப்பியவன், அதுமட்டுமல்ல சகோதரர் அமீர் அலி அவர்கள் முகம் தெரியாமல் அரசியலுக்கு வந்தபோது இந்த ஏறாவூர் மண்ணிலிருந்து அறுநூறு வாக்குகளைக் கொடுத்து பாராளுமன்றம் செல்லுவதற்கும் பங்களிப்புச் செய்தவன்.

அப்படிப்பட்ட அமீர் அலி கடந்த பொதுத் தேர்தலில் என்னை ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறினார். காரணம் என்ன என்பதனை எனது சமூத்தின் மத்தியிலே சொல்லுகின்றேன் அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்லுகின்றேன், எனது கட்சியினுடைய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தொலைபேசி ஊடாக என்னை தொடர்பு கொண்டு சுபையிர் நாங்கள் நல்லாட்ச்சிக்கு பங்களிப்புச் செய்யவிருக்கின்ற சந்தர்ப்பத்திலே அமீர் அலி மஹிந்தவிடம் இருபது லட்சம் ரூபாய்களையும், பசிலிடம் இருபது லட்சம் ரூபாய்களையும், கோட்டாவிடம் இருபது லட்சம் ரூபாய்களையும் வாங்கியுள்ளார்.

அவர் வாங்கியுள்ள நிதிகளை உடனே ஒப்படைக்குமாறு சொல்லுங்கள், என்றபோது நான் அமீர் அலி அவர்களை தொடர்பு கொண்டு சேர் நீங்கள் வாங்கிய பணங்களை திருப்பிக் கொடுக்கும்படி கூறுமாறு தலைவர் என்னிடம் பனித்தார். தயவு செய்து அதனை வழங்கி விடுங்கள் கல்குடா மக்களுக்கு தெரிந்தால் அவர்கள் கவலைப்படுவார்கள், இது பெரும் அசிங்கமாகிவிடும் எனக்கூறி முரன்பட்டேன். அதனாலே என்னை கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டார்கள் இதுதான் உண்மை. இதனை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பொய் என்று கூறுவாராக இருந்தால் அவரை அழிவுச் சத்தியம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

எனக்கு நடந்த அநிதிகளைச் சொல்லுவதற்காக எனது மசூரா சபையை அழைத்துக்கொண்டு தலைவரின் வீட்டுக்குச் சென்றேன். தலைவரோடு சொன்னேன் நீங்கள் கூறிய விடயங்களால் தான் அமீர் அலியோடு முரண்பட்டுக்கொண்டேன் நீங்கள் நீதியாக நடந்துகொள்ளுங்கள், எனக்காக பரிந்து பேசுவதற்கு யாருமே இல்லை என்றபோது தலைவர் சொன்னார். என்னுடைய கட்சி வளர்ச்சிக்காகவும் எனக்கு நம்பிக்கைக்குரியவராகவும் செயற்பட்வர்கள் நீங்கள் ஆகவே உங்களை நிச்சயமாக பொதுத் தேர்தலில் நிறுத்துவேன் என சத்தியம் செய்தார் நம்பினேன். அந்த இடத்திலே முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜெயினுத்தீன் சேர் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ரஹ்மான் சேர் அவர்களும் சாட்சியாளர்களாக இன்னும் பலரும் இருந்தார்கள்.

இறுதியாக என்னை வேட்பாளராக நிறுத்தாமல் ஏறாவூரிலே வேறொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அந்த தலைவர் எனக்கு துரோகமிழைத்தது நான் தலைவரிடம் சொன்னேன் எதிரியை மன்னித்துவிடலாம், ஆனால் துரோகியை ஒருபோதும் மன்னித்து விட முடியாது.

நீங்கள் ஒரு நம்பிக்கையற்ற தலைவர் எனக்கும் அமீர் அலிக்கும் இடையே உங்களால் ஏற்பட்ட பிரச்சிணைகளை ஒரே மேசையில் வைத்து தீர்த்துக்கொள்ள முடியாது.

தைரியமற்ற நீங்கள் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சிணைகளை தீர்க்கப் போகின்றீர்கள். தலைவர் ஒன்றுமே பேசவில்லை தைரியமாக கட்சியை விட்டு வெளியேறி அமைச்சர் ஹிஸ்புல்லாவோடு இணைந்து கொண்டேன்.

எனவே ஒருபோதும் நான் கட்சிக்கும் தலைமைக்கும் அநியாயம் செய்யவில்லை. இவ்வாறன கவலையோடு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எனக்கு நடந்த அநிதிகளை எமது சமூகத்திற்கு யாராவது சொல்லுவார்களா என சிந்தித்துக் கொண்டிருந்த போது கட்சியினுடை செயலாளர் தேசிய பத்திரிகை ஒன்றினூடாக சுபையிரின் வெளியேற்றம் பாரிய துரோகமாகும் என அறிக்கை விட்டிருந்தார்.

இந்தக்கட்சியை வைத்து நடாத்திய ஊழல்களையும் எங்களுக்கு நடந்த அநியாயங்களையும் சமூகத்தை வைத்து நடாத்துகின்ற போலி அரசியல் நாடகங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஆயத்தமாக இருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் பாரிய ஊடக மாநாடுகளை நடாத்தி இந்த நாட்டு மக்களுக்கு பல உண்மைச் சம்பவங்களை தெரிவிக்கவுள்ளோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சர் ரிஷாட்டின் குடும்பச் சொத்தல்ல. அக்கட்சியை வளர்ப்பதற்கு எவ்வளவே தியாகங்களைச் செய்தவர்கள். நாங்கள் அப்பாவி அகதி முஸ்லிம்களின் பிரச்சிணைகளை வீதிகளிலும் வெளிநாடுகளிலும் பேசிப் பேசி வளர்த்த கட்சி கிழக்கிலே உள்ள விதவைப் பெண்களை காட்டிக் காட்டி வளர்த்த கட்சி இது இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழைகளின் அமானிதச் சொத்து இதனை கூறுபோடுவதற்கு நான் ஒருபோதும் விடமாட்டேன்.

கட்சியினுடைய செயலாளர் நாயகத்திற்கு தெரியாமல் கட்சியினுடைய கொள்கை பரப்புச் செயலாளருக்குத் தெரியாமல் சட்டத்திற்கு முரனாக ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு முடியாது. இதனூடாக தலைவர் தனக்கு இருந்த நம்பகத்தன்மையை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இழந்து வருவதனை அவதானிக்க முடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(முஹம்மட் வஹாப்)

LEAVE A REPLY