பாகிஸ்தான் நாட்டின் சிறந்த உற்பத்திப் பொருட்களை இலங்கையில் காட்சிப்படுத்தும் கண்காட்சி!

0
218

பாகிஸ்தான் நாட்டின் சிறந்த உற்பத்திப் பொருட்களை இலங்கையில் காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று இன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின், ஸ்ரீமாவோ பண்டாரநாயக சாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குர்ரம்தஸ்கிர்கான், அமைச்சர் மலிக் சமரவீர ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யித் சகீல் ஹுசைன் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தப் பிரம்மாண்டமான கண்காட்சி இன்று தொடக்கம் 17 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும். பாகிஸ்தானில் முன்னணி வகிக்கும் சுமார் 110 நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. கிட்டத்தட்ட 40 கண்காட்சிக்கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வர்த்தக தொடர்புகளை இறுக்கமாகப்பேண இவ்வாறான நிகழ்வுகள் வழிவகுக்குமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் சந்திப்பின் பின்னரே இந்தக் கண்காட்சி தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இதே போன்று பாகிஸ்தானிலும் இலங்கை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சி ஒன்று விரைவில் நடாத்துவதற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ரப் ஏ.சமத்

LEAVE A REPLY