காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

0
246

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய பீரங்கி தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதியில் நால்வர் இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

காசா பகுதிக்குள் ஊடுருவி இருக்கும் இஸ்ரேலிய படை இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக பலஸ்தீன தரப்பு குறிப்பிடுகிறது. இதன்போது 23 வயது மூசா செய்தர் என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய எல்லையை கடந்து காசாவுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் மற்றும் புல்டோசர்கள் அந்த பகுதியை தரைமட்டமாக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இதில் காசாவின் தீவிரவாத கும்பல் ஒன்றின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏழு வார மோதலில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அண்மைய வன்முறைகள் காசாவில் இருந்து ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலேயே அதிகரித்துள்ளன. அங்கு பலஸ்தீனர்கள் நடத்தும் கத்திக்குத்து, வாகனத்தை மோதவிடுவது மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் கடந்த ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் 24 இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க யூதர் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் இஸ்ரேல் இராணுவம் மற்றும் சிவிலியன்கள் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.

கத்திக்குத்து நடத்த முயன்ற குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு ஹெப்ரூனில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவங்களில் கத்தியுடன் வந்த பலஸ்தீனர் இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது 23 வயது இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை அங்கு வாகனத்தில் வந்த 17 வயது பலஸ்தீனரும் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இளைஞன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை அங்கு அழைத்து வந்தார் என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY