“நாட்டின் பொது நன்மைக்கான உழைப்பில் நாமும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும்: அப்துர் ரஹ்மான்

0
260

“நாட்டின் பொது நலன்கள் பாதுகாக்கப்பட்டு நாம் வாழும் தேசத்தின் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுகின்ற போதே நமக்கான பாதுகாப்பும் தீர்வும் கிடைக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவேதான் ஒரு வருடத்திற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பிரச்சினைகளுக்கான ஒட்டு மொத்தத் தீர்வும் நாட்டின் ஆட்சி மாற்றத்திலேயே தங்கியிருக்கிறது என்பதனைப் புரிந்து கொண்டு பாரதூரமான அபாயங்களுக்கு மத்தியிலும் நாம் அதற்காக முன்னின்று உழைத்தோம்” என நல்லாட்சிகான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

NFGG யின் மக்கள் சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை காத்தான்குடியில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,
“இந்த நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடப் பூர்த்தியினை நாம் இன்று நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஒரு வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் நமது சமூகம் எதிர் கொண்ட பிரச்சினைகளையும் அபாயங்களையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. அந்த அபாயகரமான சூழ்நிலையில் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அரசியல் வாதிகளும் அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக என்ன செய்தார்கள் என்றும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட அந்த அபாயகரமான சூழ்நிலைகளுக்கான காரணம் அப்போதிருந்த அராஜக ஆட்சி முறையே என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மையாகும். இருந்தாலும் கூட அதனை மாற்றியமைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலமைகள் முன்வரவில்லை. மாற்றமாக தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு மேலும் மேலும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த அராஜக ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்தனர்.

மட்டுமன்றி அதனை வலுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் துணை போனார்கள். அந்த அராஜக ஆட்சியினை வலுப்படுத்துவவதென்பது நாட்டு நலன்களுக்கு மாத்திரமின்றி நம் சமூகத்திற்கும் செய்கின்ற துரோகம் என்பதனைப் புரிந்து கொண்டு நேர்மையுடனும் துணிவுடனும் செயற்பட அவர்கள் முன்வரவில்லை.

இனவாத சக்திகளின் நடவடிக்கைள் அத்து மீறிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இடைக்கால நிவாரணங்களுக்கு அப்பால் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. உதாரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தாக்குதல்கள் அழுத்கமையில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் பாதுகாப்புப் பற்றி பேசியதோடு மாத்திரம் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டார்களே தவிர பிரச்சினைகளின் மூல வேரான அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்து முன்வர யாரும் துணியவில்லை.

எனினும் இந்த நாட்டில் அராஜக ஆட்சி நிலவுகின்ற வரை முஸ்லிம் சமூகத்திற்கென்ற தனியான தீர்வை காணமுடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டிருந்தோம். முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியான வாழ்வு என்பது அராஜக ஆட்சி ஒழிக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்ல ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என நாம் நம்பினோம். அதனாலேயே நாம் அவ்வாறான அச்சுறுத்தலான உயிருக்கே உத்தரவாதமில்லாத கால கட்டத்திலும் கூட ஆட்சிமாற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் களத்தில் நின்றுழைத்தோம்.

இவ்வாறான ஒரு பாரிய ஆட்சி மாற்றம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் மூலமே சாத்தியமானது. இதற்காக ஐ.தே.கட்சியின் தலைமையில் சுமார் 40 சிறிய கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தமே மைத்திரிபால சிறிசேனாவுக்கும் கூட நம்பிக்கையூட்டுகின்ற ஒன்றாக மாறியிருந்தது. பொது நன்மைக்காக ஒரு பாரிய கூட்டுழைப்பு மேற்கொள்ளப்பட்ட அந்த சந்தர்ப்பத்திலும்கூட வெற்றியென்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே நமது முஸ்லிம் தலைமைகள் அதில் இணைந்து கொண்டன என்பதும் இத்தருணத்தில் நாம் நினைவுகூர வேண்டிய விடயமாகும்.

எனவேதான் சிறுபான்மையாக நாம் இங்கு வாழ்ந்தாலும் கூட பொது நன்மைக்காக உழைப்பதில் சம பங்காளிகளாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். பொது நலன்களைப் பாதுகாத்து நாட்டு நலன்களை முன்னேற்றுவதிலேயே நமது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வும் முன்னேற்றமும் தங்கியிருக்கிறது என்பது எமது நிலைப்பாடாகும்.

அந்த அடிப்படையிலேயே பொது நீரோட்டத்தில் பொது நன்மைகளுக்காக உழைக்கும் பணியில் முஸ்லிம் சமூகத்தையும் விழிப்பூட்டி இணைக்கின்ற வகையில் நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்”

LEAVE A REPLY