ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது இன்றைய நல்லாட்சி அரசின் பாரிய கடமை: எஹியாகான்

0
192

நவமணி  தினசரி பத்திரிகையின் அலுவலகம்  இனந்தெரியாதோரால் உடைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவமானது கண்டித்தக்கது மட்டுமின்றி, பாதூரமானதுமாகும். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடக சுதந்திரம் இவ்வாறான அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு முகங்கொடுப்பதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தின் குரல்கள் எவ்வாறு நசுக்கப்பட்டு அடக்கப்பட்டது என்பதனை எவரும் மறந்து விடமுடியாது. அவ்வாறானதொரு நிலைமை புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நாட்டில் இடம்பெறுவது அதிர்ச்சியைத் தருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீட உறுப்பினரான ஏ.ஸி.எஹியாகான் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  நவமணி பத்திரிகை  பல காரணங்களால் இலக்கு வைக்கப்பட்ட ஒன்றாக  உள்ளது. நவமணி ஒரு முஸ்லிம் பத்திரிகை. இதன் ஆசிரியரான என். என். அமீன் மிகுந்த சமூக ஆர்வலர்.  கடந்த காலங்களில் இந்த நாட்டில்  முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட சதி முயற்சிகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முஸ்லிம் பத்திரிகை என்ற அடிப்படையில் இந்தப் பத்திரிகை தனது பங்களிப்பைச் செய்திருந்தது.

அது போன்றே அதன் ஆசிரியரான என்.எம். அமீனும் மிகுந்த சமூக ஆர்வலர் என்ற அடிப்படையில் மிக உயர்ந்த பங்களிப்பைச் செய்திருந்தார். தனது நவமணி பத்திரிகையில் மட்டுமின்றி ஏனைய அனைத்து மொழி ஊடகங்களிலும்  தனது அமைப்புகள் ஊடாக பல விடயங்களை கூறியிருந்தார்.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு, ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அநியாயங்கள் அட்டூழியங்களை அவர் அப்பட்டமாக வெளிக்காட்டியதுடன் அவற்றின் பின்னணிகளையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலே மீண்டும் நவமணியை அலுவலகத்தை உடைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த அலுவலகத்தின் கண்காணிப்பு கமெரா எங்கிருக்கிறது என்பதனைக் கூட நன்கு தெரிந்து வைத்துக் கொண்டவர்களே இதனைச் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நவமணி  எதிர்கொண்ட மூன்றாவது சவாலாகவே கொள்ளலாம். இதற்கு முன்னரும் இரு தடவைகள் உடைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் உள்ளது.

எனவே இந்த விடயத்தைக் கையாள்வதில் நல்லாட்சி அரசுக்கும் மிகுந்த பொறுப்புண்டு. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளைச்  சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும். ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது இன்றைய நல்லாட்சி அரசின் பாரிய கடமை என்றும் யஹியாகான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY