கிழக்கு மாகாண சபையின் த.தே.கூ. உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரின் மாய வலையில் சிக்கியுள்ளனர்: எம்.எஸ் சுபையிர்

0
350

கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரின் மாய வலையில் சிக்கிக்கொண்டு தமிழ் மக்களுக்காக எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் செய்ய முடியாமல் தடுமாறுவது கவலையளிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பான பிரச்சினை ஒன்றை கல்வி அமைச்சரிடத்தில் பேசுகின்ற போது, அதனை முதலமைச்சரே கவனித்துக்கொள்வார் என அவர் கூறுகின்றார்.

முதலமைச்சரினால் தவறாக வழிநடாத்தப்படும் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் ஸ்திரமானதோர் எதிர்க்கட்சியை அமைத்து, மக்களுக்கு பயன் தரக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி, கிழக்கு மாகாண சபையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திற்காக மூவாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தன்னுடைய தொழில் முயற்சியின் ஒரு சிறிய முதலீடு என்றும் முதலமைச்சர் அண்மையில் கூறியுள்ளார்.

தன்னை பொருளாதாரத்தில் இவ்வளவு உயர்த்திப் பேசுகின்ற முதலமைச்சர், இப்பிரதேசத்தில் வாழுகின்ற ஏழைக் குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியின் மூலம் ஒரு வீட்டை அல்லது ஒரு மலசல கூடத்தையேனும் கட்டிக் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

இன்று எமது பிரதேசத்தில் வெள்ளத்தினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்வதற்கு முதலமைச்சர் தனது அதிகாரத்தினூடாக எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமை கவலையான விடயமாகும். இது எமது மக்களுக்குச் செய்கின்ற பாரிய அநிதியாகும்.

எனவே, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஏதாவது கப்பங்களை வழங்கி வாக்குகளை சூறையாடுவதற்கு வருகின்றவர்கள் ஏன் ஏழை மக்கள் விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை.

எனவே, மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(றியாஸ் ஆதம்)

LEAVE A REPLY