2016-ம் ஆண்டு ஸ்மார்ட்போன்களில் வரவுள்ள புதிய மாற்றங்கள்

0
392

ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி ஆண்டுதோறும் புதிய பரிணாமத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், 2015-ம் ஆண்டில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் காணப்பட்டன. குறிப்பாக, குறைந்த விலை மற்றும் மிட் ரேஞ்ச் போன்களின் வடிவமைப்பு, வேகத்திறன் ஆகியவை மாறியிருந்தன.

அதேபோல், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பின்வருமாறு;

2K மற்றும் 4K ஸ்கிரீன்கள்

விலையுயர்ந்த டி.வி.க்களில் எச்.டி. டிஸ்பிளே இருப்பதை போன்று இப்போது பல பெரிய ஸ்மார்ட்போன்களின் திரைகளில் எச்.டி. தொழில்நுட்பம் உள்ளன. 2560 X 1440 பிக்சல்கள் ரெசல்யூனுடன் அதாவது 2K டிஸ்பிளே உடன் பல ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன. இதைபோலவே இந்த ஆண்டு வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் அதைவிட அதிக துல்லியமாக 4K டிஸ்பிளே பெரும்பாலான போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3GB மற்றும் 4GB ரேம்

சென்ற ஆண்டை பொறுத்தவரை குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களிலும் கூட பெரும்பாலும் 1GB மற்றும் 2GB ரேம் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, பல்வேறு ஆப்ஸ்கள் பேக்கிரவுண்டில் இயங்குவதற்கு இந்த ரேம் மிக முக்கியமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு 3GB மற்றும் 4GB ரேம் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5GB மற்றும் 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதிலும் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

கைரேகை ஸ்கேனர்கள்

பாஸ்வேர்டு மற்றும் பேட்டர்ன்களை பயன்படுத்தி செல்போன்களை அன்லாக் செய்துவரும் நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் கைரேகை ஸ்கேனர்கள் ஸ்மார்ட்போன்களில் பரவலாக வரவுள்ளன. பாதுகாப்பிற்கு இதைவிட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது. தற்போது கூல்பேடு நோட் 9 போன்ற சில ஸ்மார்ட்போன்களில் இந்த வசதிகள் உள்ளன. விரைவில் ரூ.10 ஆயிரத்திற்குட்பட்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய பட்டைகள்

ஸ்மார்ட்போனை சுற்றி உள்ள கருப்பு நிற பார்டர் பெசல்ஸ் என அழைக்கப்படுகிறது. விலை குறைந்த போன்களில் இந்த பட்டை பெரியதாக இருக்கிறது. ஆனால், சென்ற ஆண்டு பல பிரபல மாடல்களில் மெல்லிய பட்டைகள் காணப்பட்டன. இது ஸ்மார்ட்போன் திரையின் அளவை முழுமையாக நாம் பயன்படுத்த உதவுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் மிகவும் மெல்லிய பார்டருடன் போனின் விளிம்பு வரை நாம் டச் செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

32 GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்

சென்ற ஆண்டு வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் இண்டர்னல் ஸ்டோரேஜ் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. 4GB, 8GB என இருந்த நிலையில், 16GB இண்டர்னல் மெமரியுடன் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு 32GB மற்றும் 64GB அளவுகளுடன் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

USB டைப் – சி

ஏற்கனவே, சென்ற ஆண்டு ஒன் பிளஸ், கூகுள் நெக்சஸ், ஜியோனி போன்களில் சில மாடல்களில் USB டைப்-சி போர்ட்டுகள் இருந்தன. தற்போதுள்ள மைக்ரோ USB போர்ட்டை விட இது வேகமானது. வேகமாக டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யக்கூடியது. விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிரா

கேமிராவை பொறுத்த வரை சென்ற ஆண்டு பிக்சல்கள் அதிகரித்து காணப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு பாயிண்ட் மற்றும் ஷூட் கேமிராக்களை ஒப்பிடும் வகையில் கேமிரா குவாலிட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரட்டை லென்ஸ், ஆட்டோ போக்கஸ், முன்பக்க கேமிராவில் இரட்டை எல்.இ.டி பிளாஷ் லைட்டுகள் போன்றவை இருக்கும்.

சார்ஜிங் வேகம்

செல்போனில் சார்ஜ் ஏறும் வேகமானது நாம் எத்தனை ஆம்ப் கொண்ட சார்ஜரை உபயோகப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே உள்ளது. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 1 ஆம்ப் அவுட்புட் கொண்ட சார்ஜர்களுடன் வெளிவருகின்றன. இதைவிட 2 ஆம்ப் சார்ஜர்கள் இருமடங்கு வேகமானதாகும். இந்த ஆண்டு வெளிவரும் போன்களில் USB டைப் – சி போர்ட்டுகளின் வாயிலாக வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வெளிவரலாம்.

LEAVE A REPLY