மக்கள் மோசமான சக்திகளை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்: சிராஜ் மஷ்ஹுர்

0
269

‘நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி மாற்றமானது, மக்கள் மோசமான சக்திகளை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே வலியுறுத்துகின்றது என NFGGயின் ஊடக செயாலாளர் சிராஜ் மஷ்ஹுர் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப்பிராந்தியக் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பும் ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வும் 09.01.16 (சனிக்கிழமை) NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே NFGGயின் கொள்கை திட்டமிடல் மற்றும் ஊடகவிவகாரங்களுக்கான செயலாளர் சகோதரர் சிராஜ் மஷ;ஹுர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் நிலவிவந்த அராஜக ஆட்சி முறையினை நிறைவிற்கு கொண்டு வந்து, ஓராண்டு பூர்த்தியான நிலையில் நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். இந்த நல்லாட்சி மாற்றத்திற்காக நாம் கடந்த காலங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டிருக்கிறோம். அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் தோற்றுப்போகவில்லை. நமது முன்மாதிரி அரசியல் செயற்பாடுகள் ஊடாக மக்களை அதிகம் விழிப்படையச் செய்திருக்கிறோம். இதன் விளைவாக காலம் காலமாக ஊழல் மோசடிகளை மூலதனமாகக்கொண்டு ஏமாற்று அரசியல் பிழைப்பு நடாத்திவந்த மோசமான சக்திகளை மக்கள் இப்பொழுது நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனை நாம் இப்பொழுது கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

கடந்த தேர்தல்களின் போது நாம் பெற்றுக்கொண்ட பல நேர்பாடான அனுபவங்களை கருத்திற் கொண்டு நாம், எதிர்வரும் தேர்தல் வியூகங்களை வகுத்து செயற்பட உத்தேசித்துள்ளோம். இப்பொழுது தேசிய ரீதியிலும் நமக்கான அதிக வாய்ப்புகள் எம்மை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. எனவே நமக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தவறிப் போனமைக்காக நாம் துவண்டுபோக வேண்டியதில்லை. நமக்கிடையிலான தவறுகளை உரிய முறையில் சுட்டிக்காட்டியும், நல்லவைகளை பாராட்டியும் எதிர் வரும் நாட்களில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயற்படுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியளாளர் MMஅப்துர்ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மட் நஜா, தலைமைத்துவ சபை உறப்பினர்களான Dr.SM ஸாஹிர், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ரிபாஸ் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், NFGGயின் ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY