பாராளுமன்றத்தை வேறு சபையாக மாற்ற பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது: முன்னாள் எம்.பி ஏ.எச்.எம்.அஸ்வர்

0
269

அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்படுகின்றது. எமது பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் படி அரசியல் திருத்தங்களை இலகுவாக மேற்கொள்ள முடியாதென முன்னாள் பாராளுமன்ற முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை அமைப்பது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட சில விடயங்கள் இருப்பதாகவும் அதில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் முக்கியமாகக் கூறப்படுகின்றது. ஆனால் பாராளுமன்றத்தை வேறொரு சபையாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்துக்கே உரிமை கிடையாது. மக்கள் ஆணை அளிப்பது பாராளுமன்றத்துக்கே. அதை யாராலும் மாற்ற முடியாது. பாராளுமன்ற விவகாரம் சம்பந்தமாக உலகின் மிகப் பிரபல்யமாக விளங்கும் எஸ்கின் மே கூட இதை அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார்.

அது மாத்திரமல்ல. இங்குள்ள பாராளுமன்ற சட்டங்களின் படி சட்டவாக்கத்தின் படி பாராளுமன்ற அரசியல் சட்டத்தின் 91 ஆவது சட்டத்துக்கு இணங்க மக்கள் அளிக்கின்ற ஆணையை பாராளுமன்றம் எந்த விதத்திலும் வேறொரு சபைக்கு வழங்க முடியாது.

இன்று நடைபெறப் போவது அதுதான். அதைத்தான் நாங்களும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாராளுமன்றம் நடைபெறுவது நிலையியக்கட்டளையின் பிரகாரம் அந்த கட்டளைக்கு ஊறு விளைவிக்க பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது. பாராளுமன்றத்தை இன்னொரு சபையாக மாற்றியமைத்தால் நிலையியல்கட்டளை சக்தி இழந்துவிடும். அப்போது சபாநாயகர் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதுதான் சட்டம். அது உறுதியானது. நிலையியல்கட்டளை இல்லாமல் ஒரு பாராளுமன்றம் நடத்த முடியாது.

மற்றொரு முக்கிய விடயம். தாய் பாராளுமன்றம் என்று சொல்லப்படுகின்ற பிரித்தானியப் பாராளுமன்றம். எந்தக் கால கட்டத்திலாவது பாராளுமன்றத்தை வேறொரு சபையாக மாற்றியது கிடையாது. முக்கியமாக இப்போது செய்யவேண்டியது இதுதான். பாராளுமன்றத்துக்கு முன் பிரேரணை சமர்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு அது வேறெங்கும் அந்தப் பிரேரணை சம்பந்தமாக வேறு இடத்தில் சாட்சிகளைப் பதிவு செய்யலாம். அந்த சாட்சிகளின் படி மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்து அனுமதியைப் பெற்று ஒரு கருத்துக்கணிப்பு ஏற்படுத்தி அதன் மூலமாக மூன்றில் இரண்டு பங்கு அதிகூடிய வாக்குப்பெற்ற பிறகு மீண்டும் பாராளுமன்றம் வந்து நிறைவேற்றி அதன் பிறகுதான் இப்படியான விஷயங்களை முன்னெடுக்க முடியும்.

1972 இல் கொல்வின் ஆர்.டி சில்வா இதைத்தான் செய்தார்கள். சிறிமா அம்மையார் காலத்தில் நாங்கள் எல்லோரும் நவரங்கஹலவில் கூடுவோம். அரசியல் சீர்த்திருத்தச் சட்டத்தைமாற்றியமைப்பதற்கான வேண்டுகோளை விடுத்துதான் நவரங்கஹலவில் அன்று கூடினார்கள். அதுதான் முறையும் கூட. மக்களுடைய ஆணைக்குப் புறம்பாக தற்போது உள்ள பாராளுமன்றத்தை இன்னொரு சபையாக மாற்றமுடியாது.

ஒரு பிரேரனையை நிறைவேற்றலாம்> ஒரு கமிஷனை அமைக்கலாம். இங்கே விவாதித்து மக்களுடைய சிபாரிசுளை பெற்ற பிறகு தான் அதை பற்றி பரீசிலனை செய்த பிறகு> மீண்டும் பாராளுமன்றம் வந்து நிறைவேற்றுவதுதான் உலகப் பாராளுமன்ற விவகாரம் சம்பந்தமாக நிபுணர்களுடைய முடிவாகும்.

அதுமட்டுமல்ல> இப்போது நிறைவேற்று அதிகாரமுள்ள சபையை இல்லாமல் ஆக்குவது என்று சொன்னால் அதற்கு அரசாங்கத்தின் உள்ளே இருந்து கூட இப்போது குரல் எழுப்பப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை முற்றும் நீக்க முடியாது. அப்படி நீக்குவதன் மூலமாக இந்த நாட்டு சிறுபான்மை இனத்தவர்களுக்கு பலவிதத்திலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூட அந்த நிலைப்பாட்டில் தான் இருந்தார் .

ஆகவே சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய வகையில்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க முடியுமென்பது எனது கருத்தாகும். இதைத்தான் பாராளுமன்றத்தில் கடந்த 25 ஆண்டு காலமாக பல துறைகளிலும் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் பிரித்தானிய பாராளுமன்ற முறைகளை குறிப்பாக எஸ்கின் மே போன்றவர்களுடைய கூற்றுப்படியும் நன்றாக அவைகளைப்பற்றிய தெளிவான அபிப்பிராயம் கொண்டிருப்பவன் என்ற வகையிலும் இந்த விபரத்தை நான் இவ்வேளையில் மக்களுக்குத் தெளிவு படுத்த விரும்புகின்றேன் என்றார்.

எம்.எஸ்.எம்.சாஹிர்

LEAVE A REPLY