தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

0
206

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (12) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு நான்கு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. ‘கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத்தக்கூடாது.

இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப் படுகிறது’ என அறிவித்த மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஒருவர் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதால்,அதன் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பீட்டா மனு விவரம்:

விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும், 2010 முதல் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 1100 பேர் ஜல்லிக்கட்டால் காயமடைந்துள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் பீட்டா அதன் மனுவில் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு 3 காளை மாடுகள் இறந்துவிட்டதாகவும் பீட்டா மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY