சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய அரிய வாய்ப்பு இப்பொழுது புதிய அரசியல் யாப்புக்காக கனிந்துள்ளது: நஸீர் அஹமட்

0
249

சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய அரிய வாய்ப்பு இப்பொழுது புதிய அரசியல் யாப்புக்காக கனிந்துள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் திங்கள் இரவு இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

றிபாய் பள்ளிவாயல் தலைவரும் ஸ்ரீலமுகா ஏறாவூர் கிளையின் கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல். முஹைதீன் பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,

காலங் கடந்தாயினும் தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகத்தவர்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இப்பொழுது கனிந்து வந்துள்ளது.

இதனை சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல். சமூக. மற்றும் மதத் தலைவர்கள் என்ன தியாகங்களைச் செய்தேனும் ஒற்றுமைப்பட்டு வருகின்ற அரசியல் மறுசீரமைப்பு மாற்றத்திலே ஒரு தாய் பிள்ளைகள் போல பங்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆகக் கூடிய அக்கறை எடுக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்கள் இனிமேலும் பிளவுபட்டு நின்றால் இந்த நாட்டில் சிறுபான்மையினரே தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டதாக ஆகி விடும்.

சிறுபான்மையினர் பிளவுபட்டு சின்னாபின்னமாகி சிதறுண்டு போகும் பட்சத்தில் அவர்களது உரிமைகள் அவர்களுக்குத் தெரியாமலே பறிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து போகக் கூடிய பேராபத்து இருக்கின்றது.

முதலில் சிறுபான்மையினராகிய தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் கட்சி பேதத்தை மறந்து தங்களது சமூகங்களுக்குள் ஒன்றுபட வேண்டும். அதன் பின்னர் தமிழர்களும் முஸ்லிம்களும் மலையகத்தவர்களும் சிறுபான்மையினர் என்கின்ற கோதாவில் இறுக்கமாகவும் நெருக்கமாகவும் ஒன்றுபட்டு பாரிய அளவில் அத்தனை அரசியல் உரிமைகளையும் வெற்றியீட்டிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.

இந்தக் கனவை அடைவது முடியாத காரியமல்ல. அப்பொழுதுதான் இந்த நாட்டில் உண்மையான சமாதானமும் சௌஜன்யமும் நிலவும். இந்த விடயத்தைப் பெரும்பான்மை சமூகமும் பெருமனதோடு புரிந்து கொள்ள வேண்டும். சுத்தமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப பெரும்பான்மையினரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY