முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: யூ.எல். முஹைதீன் பாவா

0
239

முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலமுகா ஏறாவூர் கிளை கொள்கை பரப்புச் செயலாளரும் றிபாய் பள்ளிவாயல் தலைவருமான யூ.எல். முஹைதீன் பாவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த விடயத்தை கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களிடமும் தான் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து மேலும் தெரிவித்த முஹைதீன்பாவா அபிவிருத்தித் திட்டங்கள், கட்சி சம்பந்தப்பட்ட விடயங்கள், மக்களின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்கும் போது மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுவது இந்த சமூகத்திற்கு அதிக இழப்புக்களைத் தரும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தவர்களில் ஒரு சிலரே இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகையவர்களது அனுபவங்கள் இந்த சமுதாயத்தின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, நாட்டில் ஆயுத வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஜனநாயகப் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக ஸ்தாபிக்கட்டது. அவ்வேளையில் அதன் ஸ்தாபகர்கள் உயிரச்சுறுத்தல் தொடக்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்து ஸ்ரீலமுகாவைக் கட்டிக் காத்தவர்கள்.

அவர்கள் இப்பொழுது ஓரங்கட்டப்படுவது வேதனைக்குரியது. மூத்த உறுப்பினர்களுக்கு கௌரவமளிப்பதோடு அவர்களது நலனோம்பு விடயங்களில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.

மூத்த உறுப்பினர்களை ஓரங்கட்டுவது அடுத்த இளம் சமுதாயத்திற்கும் சிறந்த வழிகாட்டலாகவும் இருக்காது. மூத்த உறுப்பினர்களின் அனுபவங்களையும் தியாகங்களையும் ஒரு வளமாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு மூத்த உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும் கட்சியின் பிரதித் தலைவர் என்கின்ற வகையிலும் கவனம் எடுக்க வேண்டும் என்றும் முஹைதீன்பாவா வேண்டுகோள் விடுத்தார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY