சிறுபான்மையினருக்கு துரோகம் செய்த இருள் சூழ்ந்த யுகம் கடந்து விட்டது: அலிஸாஹிர் மௌலானா

0
317

“ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி அரசியல் யாப்பு சீர் திருத்தத்தைக் கொண்டு வந்து சிறுபான்மையினருக்கு துரோகம் செய்த இருள் சூழ்ந்த யுகம் கடந்து விட்டது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களகப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் ஆறாம் குறிச்சியில் வறிய மாணவர்கள் 50 பேருக்கு ஞாயிறன்று இடம்பெற்ற இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வாழும் அனைத்து சமூக மக்களினதும் நேரடிப் பங்களிப்புடனான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குதல் காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

அதனடிப்படையிலேயே நல்லாட்சிக்கான அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டு வருகின்றது.

இது நாட்டுப் பிரஜைகள் அனைவரினதும் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் ஏற்படக் கூடிய முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள நாம் சிறுபான்மையினர் என்கின்ற அடிப்படையில் முழுமையான பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

நாட்டின் அதியுயர் ஆவணமான அரசியல் அமைப்பு நாட்டின் அனைத்து சட்ட திட்டங்கள், மற்றும் ஒழுங்கு விதிகள் என்பன அரசியல் அமைப்பிற்கு அமைவாக இடம்பெற வேண்டும்.

1972, மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கள் நாட்டு மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்படவில்லை.

அது மக்களின் பங்களிப்பு எதுவுமின்றி இருண்ட யுகத்தில் கொண்டுவரப்பட்டதாகும் என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

(அப்துல்லாஹ்)

DSC00442 DSC00480 DSC00484

LEAVE A REPLY