ஏமனில் எங்கள் தூதரகம் தாக்கப்பட்டது, திட்டமிட்ட செயல்: ஈரான்

0
231

சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக ஷியா பிரிவு தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு சமீபத்தில் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது ஷியா பிரிவு ஆதரவு நாடான ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டெஹ்ரானில் இருந்த சவுதி தூதரகம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை சவுதி அரேபியா முறித்துக்கொண்டது. பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகளும் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக ஈரானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தன.

இதனால் சவுதி அரேபியா-ஈரான் இடையே பனிப்போர் மூண்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சவுதி கூட்டுப்படை, தலைநகர் சானாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சவுதி கூட்டுப்படை ஈரான் தூதரகம் மீது குண்டுகளை வீசியதில் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், தூதரக காவலர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது சவுதி அரேபியாவின் திட்டமிட்ட செயல் என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி ஹூஸைன் ஜபாரி, ‘‘இந்த செயலுக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு, அதோடு எங்களது(ஈரான்) தூதரக கட்டிடத்தின் சேதங்கள் மற்றும் காவலர்களின் படுகாயங்களை அவர்கள் ஈடுசெய்ய வேண்டும்” என கூறினார்.

இருந்த போதிலும் சவுதி கூட்டுப்படை இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.

LEAVE A REPLY