அனைத்து மக்களையும் அரவணைக்கும் நல்லாட்சி: மசூர் மௌலானா

0
263

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான வெற்றிகரமான நல்லாட்சிக்கு ஒரு வருடம் பூர்த்தியாகும் இத்தருணத்தில் நாட்டில் நல்லாட்சி நகர்ந்து வரும் செழுமையான பாதையையும், நல்லாட்சியில் முஸ்லிம்கள் அடைந்திருக்கும் அளப்பரிய உபகாரங்களையும் ஆத்மார்த்தமான நெகிழ்ச்சியுடன் அசை போடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மையில், நல்லாட்சியானது நாட்டில் அமைதி, சமாதானம், சௌஜன்யம் விரும்பும் அனைத்து மக்களினதும் ஒப்பற்ற விருப்பை பெற்று இன்று ஓராண்டை நிறைவு செய்திருப்பதானது தேசத்தை நேசிக்கும் அத்தனை பிரஜைகளுக்கும் மகத்தான வெற்றியாக கணிக்கப்படுகிறது.

கட்சி வேறுபாடுகள், கொள்கைகள், தனிநபர் அரசியல் சாதனைகள், சேவைகள் தாண்டி நாட்டில் மக்கள் நல்லாட்சியின் தேவையை உணர்ந்ததன் விளைவாக இப்படியான ஒரு சிறப்பான ஆட்சித் தெரிவு உருவானது. நல்லாட்சியில் நம்பிக்கை வைத்த மக்களின் அசைக்க முடியாத எதிர்பார்ப்புகள் ஓராண்டில் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

குறிப்பாக, சிறுபான்மை மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் நல்லாட்சியில் அதிகமதிகம் நிறைவேறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் ஆழமான புரிந்துணர்வுடன் சிறுபான்மை இனங்களின் இதயத்தை வென்றெடுக்கும் செயற்பாடுகளில் இறங்கி, அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளனர்.

நான் நல்ல விடயங்களை பாராட்டுவதில் என்றுமே பின் நிற்பதில்லை. அந்தவகையில், நல்லாட்சியில் முதல் வெற்றியாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சம்பந்தன் ஐயா அவர்களை எதிர்கட்சித் தலைவராக நியமித்தமை கருதப்படுகிறது.

இனவாதத்தை கக்கும் ஒரு சில பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு நல்லாட்சி அரசின் இம்முடிவு சிம்ம சொப்பனமாக இருந்தாலும்- தேசத்தின் ஐக்கியத்தை விரும்பும் சகல மக்களுக்கும் இம்முடிவானது பெரு விருப்புக்குரியதாய் அமைந்து விட்டதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த காலங்களைப் போலன்றி சிறுபான்மை மக்கள் நல்லாட்சியில் ஸ்திரமான ஒரு நிலையை நோக்கி பயணிக்கின்றனர். ஆங்காங்கே, விரும்பத்தகாத இனவாத நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் அவை நல்லாட்சிக்கு ஊறு விளைவிக்கும் தீய சக்திகளின் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி மைத்திரி அவர்களின் நல்லாட்சி அரசின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை இங்கே நான் சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு இருந்த அச்சம்,பீதி என்பன நீங்கியிருப்பதனையும் உணர முடிகிறது.

அன்று ஒரு சில இனவாத கும்பல்களால் நாட்டில் முஸ்லிம்களுக்கு அசாதாரண சூழல் நிறைந்து காணப்பட்டது. அளுத்கமை-பேருவளை கலவரம், பள்ளியுடைப்பு, கிறீஸ் பூதங்களின் தொல்லை, கருத்துகள் மீதான வன்முறை என பல கோணங்களில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டதை நாம் மறப்பதற்கில்லை. நல்லாட்சியில் அந்நிலை நீங்கியிருப்பது உண்மையில் மகிழ்ச்சியை தரக்கூடியதாயிருக்கிறது.

மேலும், கடந்த ஆட்சியில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் போட்டி மனப்பான்மை, உட்பூசல், சமூக பற்றின்மை காரணமாக அன்றைய தலைவரினால் நாட்டில் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிருந்த பல்வேறு வரப்பிரசாதங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

உதாரணமாக, அன்று புத்த சாசன அமைச்சின் கீழே முஸ்லிம் விவகாரங்களுக்கான நிர்வாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அன்று முஸ்லிம்கள் பல அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டது.

ஆனால், இன்றைய நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக கௌரவ. ஹலீம் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும். முஸ்லிம் சமய கலாசார அமைச்சு தற்போது சிறப்பான முறையில் செயற்படுவதால் முஸ்லிம்கள் அமைச்சின் கீழ் வரும் தங்களின் வேலைத்திட்டங்களை குறுக்கீடுகள் மற்றும் சங்கடங்களின்றி செய்ய முடிகிறது.

அதிகாரம் மற்றும் பெயர் பொறித்தல், பதவி போட்டிகளால் அன்று ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஹஜ் விவகாரங்களிலும் பாரிய சீர்கேடுகள் நிலவி வந்ததை அறிவோம். ஆனால், அந்த நிலைமை தற்போதில்லை என்பது நல்லாட்சியின் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.

மேலும், சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்று அங்கு கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி மூதூர் றிஸானாவை விடுதலை செய்து நாட்டிற்கு கொண்டு வருவதில் நான் மிகுந்த பிரயத்தனங்களைச் செய்தேன்.

றிஸானாவின் விடுதலைக்கான நகர்வுகளை அங்குள்ள அரசு, மன்னர் குடும்பம், கொலை செய்யப்பட்ட குழந்தையின் கோத்திரத் தலைவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் பேசி சுமூகமாய் தீர்க்க முனைந்த தருணங்களில் இங்குள்ள ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியலுக்காய் றிஸானாவின் விடுதலை விவகாரத்தில் மூக்கை நுழைத்து என்னுடைய இடைவிடாத முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், இறுதியில் றிஸானாவின் விடுதலைக்காய் அன்றைய அரசுடன் இணந்து நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவியது.

அண்மையில், இலங்கைப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டதை ஊடகங்கள் ஊடாக அறிந்திருப்பீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ், இலங்கை அரசு இவ்விடயத்தில் எனது உதவியை நாடியதன் பேரில் நான் முழு மூச்சாக செயற்பட்டதன் நிமித்தம் அந்தப் பெண்ணின் மரண தண்டனையை ரத்துச் செய்ய முடிந்தது. என்னுடன் இணைந்து இந்தப் பெண்ணின் தண்டனையை ரத்துச் செய்யும் பணிகளில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயர்ந்தபட்சம் ஒத்துழைத்தமையை இவ்விடத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இப்பெண்ணின் தண்டனை விவகாரத்தில் ‘நான் தனியாக செயற்பட்டு இதனை வெற்றி பெற்று தருகிறேன்’ என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நான் வாக்குறுதியளித்தேன். அல்லாஹ்வின் பேருதவியால் இவ்விடயத்தில் என்னால் வெற்றி பெற முடிந்தது.

ஆனால், ஒரு சில அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் அப்பெண்ணின் மரண தண்டனையை தாங்களே ரத்துச் செய்ய பாடுபட்டதைப் போல தம்பட்டமடித்த காரணத்தினாலேயே இவ்விடயத்தை இவ்விடத்தில் பகிரங்கப்படுத்த நினைத்தேனே தவிர வெறும் குறுகிய அரசியல் லாபங்களுக்காக அல்ல. இப்படியாக, சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் நல்லாட்சி அரசு அனைவருடனும் கை கோர்த்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மெச்சத்தக்கதாகும்.

அன்று மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடன் இணைந்திருந்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அவர்களை செயற்பட வைத்தமை பாரிய தவறாகும். மேலும் மஹிந்த அரசாங்கத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் குறுநில மன்னர்கள் போல செயற்பட்டனர். முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளை சர்வதேச மயபப்டுத்துவதில் பின் நின்றனர்.

ஆனால், இன்று நல்லாட்சியின் கட்டுக்கோப்பில் முஸ்லிம் அரசியலிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் ஒரு எளிமையான மனிதாபிமான மிக்க தலைவராக நாட்டை முன் கொண்டு செல்வது சர்வதேசங்களில் பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து நாட்டு தலைவர்களுடனும் சுமூகமான நட்புறவைப் பேணுவது இதன் முக்கிய அம்சமாகும்.

எனவே, நாம் பாகுபாடுகள் மறந்து, இன,மத,பேதங்கள் துறந்து நல்லாட்சியின் நேசக்கரங்களுடன் கை கோர்த்து எமது அழகிய முன்னேற்றப் பாதையில் முன் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

LEAVE A REPLY