அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அவசரகால நிலை பிரகடனம்

0
340

அமெரிக்காவில் மீதேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனத்தின் வாயு குழாயிலிருந்து நச்சு வாயுவான மீதேன் கசிந்து வருவதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பகுதியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் ‘சோகால்கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 8,000 அடிக்கு மேல் ஆழமுள்ள அந்நிறுவனத்தின் கிணற்றில் இருந்து வாயுக் கசிவு ஏற்படுவது கடந்த ஆண்டு ஒக்டோபர் 23-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கசிவு நவம்பர் மாத இறுதியில் உச்சகட்டத்தை எட்டியதாக கலிபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30,000 முதல் 58,000 கிலோ வரை நிறை கொண்ட மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ளது போர்டர் ராஞ்ச் பகுதி, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமட்டலும், மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறியதை அடுத்து, கடந்த திங்கள் அன்று அப்பகுதி மக்களை கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்தார்.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போர்டர் ராஞ்ச் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அரசு முகமைகளும் மாநில அதிகாரிகள், உபகரணங்கள் மற்றும் அரசு அளிக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட் கூறும்போது, கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(NF)

LEAVE A REPLY