தற்போது சிலர் நல்லாட்சியின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி செய்கின்றனர்: பா.உ. இம்ரான் மஹரூப்

0
278

என்னோடு போட்டியிட யாருமில்லையா? என மார்தட்டி கொண்டு சர்வாதிகாரத்தை நோக்கிசென்ற ஜனாதிபதியொருவரை ஜனநாயக வழியில் வீட்டுக்கு அனுப்பி வைத்து வரும் ஜனவரி 8 முதல் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இன்றைக்கு ஒருவருடத்துக்கு முந்திய காலப்பகுதியில் ஒரு அரசியல் கலாச்சாரம் காணப்பட்டது. ஒரு குடும்பம் ஜனநாயக போர்வையில் மன்னராட்சி செய்து கொண்டிருந்தது. இதை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சு பதவிகளும் அதை ஏற்க மறுப்பவர்களுக்கு புலி முத்திரைகளும் குத்தப்பட்டன.

அளவுக்கதிகமான வெளிநாட்டு கடன்களை கொண்டு கண்காட்சி அபிவிருத்தி திட்டங்களும் அதில் அரைவாசி கடன்கள் அவர்களின் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்டது. இந்த உண்மைகளை கூறிய ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெள்ளை வேன்கள் அனுப்பப்பட்டன.

கடன் சுமையை மக்கள் மேல் திணித்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டன. இந்த சுமையை மக்கள் அறியாதிருக்க இனவாத இயக்கங்கள் உருவாக்கப்பட்டு அரச ஆதரவில் இயங்கி மக்கள் மத்தியில் இனவாதம், மதவாதம் வளர்க்கப்பட்டன.

இறுதியாக எமது ஐக்கியதேசியக் கட்சி தலைமையில் பொது எதிரணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் போட்டியிட்ட பொது வேட்பாளர் இன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உங்கள் ஆதரவின் மூலம் வெற்றிபபெற்று நல்லாட்சி ஆரம்பிக்கபட்டது.

இந்த ஒருவருட காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் தேர்தல் காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுள்ளன. மீண்டும் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 19 வது திருத்த சட்டமூலம் நீக்கப்பட்டது.

இடைகால வரவு செலவுத்திட்டம் மூலம் வரிகளை குறைத்து மக்களின் வருமானங்கள் அதிகரிக்கப்பட்டன. அரச ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது

நாட்டிலிருந்து வெள்ளைவேன் கலாச்சாரம் முற்றாக அழிக்கப்பட்டது ஊடக சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சனைக்கு முற்றாக தீர்வு பெற்றுகொடுக்க முதற்படியாக தமிழ் மக்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறோம். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் நிம்மதியாக தமது சமய வழிபாடுகளை செய்யகூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இவை அனைத்துக்கும் பின்னால் எமது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய தியாகங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக கடந்த பொதுத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு எமது கட்சிக்கு காணப்பட்டபோதும் நல்லாட்சியை தொடர தேசிய அரசு அமைக்க நாம் உடன்பட்டோம்.

இதன் மூலம் நல்லாட்சியை எதிர்த்தவர்களுக்கு அமைச்சுக்களும் அபிவிருத்தி குழுத்தலைவர்களும் வழங்கி நல்லாட்சிக்காக பாடுபட்ட பல ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தியாகம் செய்துள்ளனர்.

பாரளமன்றத்தில் காணப்படும் சில அரசியல் அனாதைகள் நாம் மீண்டும் பெற்றுகொடுத்த இந்த ஊடக சுதந்திரம் மூலமே இந்த நல்லாட்சியை கவிழ்க்க பொய் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

அவர்களுக்கு புரியவில்லை இதுதான் நல்லாட்சியின் வெற்றி என்பது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஊடகங்களின் முன்னால் வீர வசனம் பேசும் சிலர் பின்கதவால் வந்து அமைச்சு பதவிகளுக்கு பேரம் பேசுகின்றனர்

தற்போது சிலர் நல்லாட்சியின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி செய்கின்றனர் இவர்களுக்கு ஒன்றை நினைவூட்டிகொள்கிறோம். ஆயிரக்கணக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதற்கு நல்லாட்சி ஒன்றும் குட்டிச்சுவரல்ல.

கொள்கைக்காக பிரிந்து செல்கிறேன் என கூறிச்சென்று அடுத்தநாளே மீண்டும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொண்ட பாரளுமன்ற உறுப்பினரொருவர் கருப்புகொடியுடன் சுற்றுகிறார். நாமும் ஏற்றுகொள்கிறோம். ஊழலை விரும்புவோருக்கு இது துக்கதினம் தான்.

ஆகவே, நாம் நாட்டை நேசிக்கும் மக்களிடம் கேட்டுக்கொள்வது, ஜனவரி 8 ஆம் திகதி உங்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு இந்நல்லாட்சிக்கான உங்கள் ஆதரவையும் வெளிப்படுத்துங்கள்.

மூவினங்களும் ஒன்றுபட்டு காங்கேசன்துறை முதல் தேவேந்திரமுனை வரை இந்நாட்டை சகல துறைகளிலும் அபிவிருத்தி அடைய செய்ய தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

இம்ரான் மஹரூப்
பாராளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி

LEAVE A REPLY