இலங்கை – பாகிஸ்தான் எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0
320

விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கல் மற்றும் நிதிமோசடி தொடர்பான புலனாய்வு பரிமாற்றம் உட்பட எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் பாகிஸ்தானும் இலங்கையும் நேற்று கொழும்பில் கைச்சாத்திட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இவ்வுடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தல் நேற்று மகத்தான செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

குதிரைப்படையினரின் அணி வகுப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு சிங்கள பாரம்பரிய கலாசார நடனங்களுடன் வரவேற்பளிக்கப்பட்டது. இவ்வரவேற்பின்’ நிமித்தம் இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன் பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இவ்வரவேற்பு வைபவத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் நவாஸ் ஷெரிபும் விஷேடமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையிலிருந்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாட்டு அமைச்சர்களை பாகிஸ்தான் பிரதமருக்கு அறிமுகப்படுத்திட, பாகிஸ்தான் பிரதமர்’ அவருடன் வருகை தந்துள்ள அமைச்சர்களையும் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலும் ஜனாதிபதி செயலகத்தில் இரு பக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பினரும் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சார்த்திட்டனர்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்தழைப்பு, சுகாதாரத் துறை ஒத்தழைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதி மோசடி தொடர்பான நிதிப் புலனாய்வு பரிமாற்ற ஒத்தழைப்பு, கலாசார ஒத்துழைப்பு, வர்த்தக ஒத்துழைப்பு, புள்ளிவிபரவியல் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பான ஒத்தழைப்பு, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் தொடர்பான ஒத்தழைப்பு ஆகிய எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளுமே இந்நிகழ்வின் போது கைச்சார்த்திடப்பட்டன.

இந்த உடன்படிக்கைகளில் இலங்கை சார்ப்பில் அமைச்சர்களான டொக்டர் ராஜித சேனாரட்ன, சுசில் பிரேம ஜயந்த், ரவி கருணாநாயக்கா, எஸ். பி. நாவின்ன, மலிக் சமரவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா மற்றும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன ஆகியோரும் பாகிஸ்தான் சார்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரிக் பத்தமி, வர்த்தக அமைச்சர் குர்ராம் தஷ்தகிர் கான், வர்த்தக அமைச்சு செயலாளர் முஹம்மத் ஷெஹ்சாத் அர்காப் ஆகியோர் கைச்சதார்த்திட்டனர்.

இவ்வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிஷாட் பதியுத்தீன், கபீர் ஹாஸிம், சம்பிக்க ரணவக்க, லக்க்ஷ்மன் கிரியெல்ல, சாகல ரட்நாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY