முறையான விசாரணைக்கு பின்னரே 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினோம்: ஐ.நா.வுக்கான சவுதி தூதர்

0
454

மன்னராட்சியின் கீழுள்ள சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அவ்வகையில், நேற்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாளில் 47 பேரின் தலைகளை துண்டித்துக் கொன்று சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, நிம்ர் அல்-நிம்ரிட்ஸ்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சவுதி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்த பான் கி மூன், சவுதி அரசு மரண தண்டனை விதிப்பதை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். நிம்ர் அல்-நிம்ரிட்ஸுடன் சேர்த்து 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்ப்பட்டதை அறிந்து பான் கி மூன் வேதனை அடைந்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டதா? என்று உறுதியாக தெரியவில்லை என்னும் பொருள்படும்படியாக பான் கி மூனின் அறிக்கை அமைந்திருந்தது.

இந்நிலையில், முறையான விசாரணைக்கு பின்னரே நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் உள்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினோம் என ஐ.நா.வுக்கான சவுதி அரேபியா அரசின் தூதர் விளக்கம் அளித்துள்ளார். அவர்களின் கல்வி, சமூக அந்தஸ்து, இனம் மற்றும் பிரிவு என்ற பாகுபாடின்றி நியாமான முறையிலும், நேர்மையான முறையிலும் நீதிமன்றங்களில் விசாரணை நடத்திய பின்னரே மரண தண்டனை விதிக்கப்பட்டது என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY