சென்னை மழைக்கு 470 பேர் பலி; 493,716 குடிசைகள் சேதம்; 347,297 ஹெக்டேர் பயிர்கள் நாசம்: முதல்வர் ஜெயலலிதா

0
379
Jeya
வெள்ள நிவாரண உதவிகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு நிவாரண உதவித் தொகையை இன்று (4.1.2016) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் மொத்தம் 470 பேர் பலியாகியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாகவும், நிவாரணப் பணிகள் தொடர்பாகவும் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை காலம் என்பது அக்டோபர் மாதம் முதல் நாள் முதல் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை என கணக்கிடப்படுகிறது.

இந்த வடகிழக்கு பருவமழை காலதாமதமாக 28.10.2015 அன்று துவங்கியது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், நான்கு கட்டங்களில் தமிழகத்தில் கன மழை பெய்தது.

ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கன மழை பெய்ததன் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாயின.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில், பெருமழை பொழிந்ததன் காரணமாக பாதிப்புகளும் அதிகமாக இருந்தன.

வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மிக அதிக அளவு கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மீட்புப் பணியில் 80,000 பேர்:

இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், இதர துறையினர் என 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மழை வெள்ளம் சூழ்ந்ததால், பாதிப்புக்கு உள்ளான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டன. பாய் மற்றும் போர்வைகள், பால் பவுடர் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

25,912.45 கோடி கோரப்பட்டுள்ளது:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கன மழை வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்ற காரணத்தால், மத்திய அரசு, இந்த பாதிப்பை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் மற்றும் பொது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆகியவற்றை சீர் செய்ய தேவையான 25,912.45 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளது.

மத்திய குழு மீண்டும் ஆய்வு:

முதல் மூன்று கட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட போது, அந்த பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மத்திய அரசால் அனுப்பப்பட்ட அதே மத்திய குழு தற்போது நாளை (5.1.2016) முதல் இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மத்திய அரசுக்கு தனது அறிக்கையை அளிக்கும்.

அதனடிப்படையில், மத்திய அரசு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியை தமிழகத்திற்கு வழங்கும் என நான் நம்புகிறேன்.

அரசின் நிவாரண உதவிகள்:

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய்; வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு குடிசை இழப்புக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை; குடிசைகள் மற்றும் நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை.

கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய்; ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய்; கோழி இழப்பிற்கு 100 ரூபாய்; நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றும் 7,410 ரூபாய்; நீண்ட கால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் என்ற வீதத்தில் பயிரிழப்பிற்கு நிவாரணம்; முழுவதும் பாதிக்கப்பட்ட கட்டு மரம் ஒன்றுக்கு 32,000 ரூபாய்;

பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய்; முழுவதும் பாதிக்கப்பட்ட வல்லம் ஒன்றுக்கு 50 சதவீத மானியம் என்ற அடிப்படையில் 75,000 ரூபாய் வரை நிதி உதவி; பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி வல்லம் ஒன்றுக்கு 20,000 ரூபாய்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீத மானியம் என்ற அடிப்படையில் 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி; பகுதி சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவு 60 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் 3 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி; கட்டுமரங்களுக்கான வலை சேதங்களுக்கு 10,000 ரூபாய்; படகுகளில் வெளிப்புறம் பொருத்தப்படும் இயந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என இந்தப் பெருமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

470 பேர் பலி:

வடகிழக்கு பருவமழை காலமான 1.10.2015 முதல் 27.10.2015 வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாளான 28.10.2015 முதல் 31.12.2015 வரை மழை வெள்ளம், சுவர் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது, ஆறு, குளம் ஆகியவற்றில் மூழ்கியது, இடி, மின்னல் தாக்கியது போன்ற காரணங்களால் 421 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 470 பேர் பலியாகினர்.

விரைவில் ரூ.4 லட்சம் நிவாரணம்:

இதில் 245 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு இந்த நிவாரண உதவி இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்பட்டு விடும்.

4,93,716 குடிசைகள் சேதம்:

வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு குடிசை இழப்புக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை; குடிசைகள் மற்றும் நிரந்தர வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவை வழங்க நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. 4,93,716 குடிசைகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.5000 உதவித் தொகை செலுத்தப்பட்டது:

25,48,152 வீடுகள் மற்றும் குடிசைகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நான் அறிவித்தபடி நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும். இந்த நிவாரண உதவிகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு நிவாரண உதவித் தொகையை இன்று (4.1.2016) தலைமைச் செயலகத்தில் வழங்கி உள்ளேன்.

14 லட்சம் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்றே அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு நாளையே அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மீதமுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 11.1.2016-க்குள் அனுப்பப்படும்.

இந்த 30.42 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றவர்கள், நிவாரண உதவித் தொகைப் பெற்றதற்கு ஆதாரமாக வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் குடும்ப அட்டையை காண்பித்து நியாய விலைக் கடைகளில் அரிசி, வேட்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் இந்த நிவாரண உதவியை வரும் பிப்ரவரி மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பெருமழை காரணமாக 3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள் மற்றும் 85,895 கோழிகள் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு இதுவரை நிவாரணத் தொகையாக 7.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இப்பணி முழுமை பெறும்.

3,47,297 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம்:

பெருமழை காரணமாக பாதிப்புக்குள்ளான பயிர்களை கணக்கீடு செய்ய வருவாய் துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பயிரிழப்பு கணக்கீடு முடிவடைந்துள்ளது.

இதன்படி 3,47,297 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்களும், 35,471 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தோட்டக் கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மொத்தம் 3,82,768 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர் சேதங்களுக்கு, இது வரை 68,350 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 29.48 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பயிர் சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்பட்டு விடும்.

மீனவர்களுக்கு நிவாரணம்:

இந்தப் பெருமழையில் முழுமையாக சேதமடைந்த 4 இயந்திரப் படகுகள், பகுதி சேதமடைந்த 42 இயந்திரப் படகுகள், முழுவதும் சேதமடைந்த 65வல்லங்கள், பகுதி சேதமடைந்த 654 வல்லங்கள், முழுமையாக சேதமடைந்த 20 கட்டுமரங்கள், பகுதி சேதமடைந்த 231 கட்டுமரங்கள், சேதமடைந்த 8,106 வலைகள், 3047 இயந்திரங்கள் மற்றும் 130.90 ஹெக்டேர் பரப்பிலான சேதமடைந்த மீன் விதைப் பண்ணைகள் ஆகியவற்றிற்கு நிவாரண உதவியாக 12.82 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

11-ம் தேதிக்குள் முழு நிவாரணம் வழங்கப்படும்:

வரலாறு காணாத பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையை எனது அரசு விரைந்து வழங்கி வருகிறது. இன்று 700 கோடி ரூபாய் அளவில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத் தொகை 11.1.2016-க்குள் வழங்கப்படும்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY