இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

0
461
Quake_manippoor
நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களுக்கு மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திபெத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, மணிப்பூர் மாநிலத்தின் டெமங்லாங் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 6 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று பலத்த சேதமடைந்ததாகவும் அங்கு இதுவரை 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடம் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

அசாமில் 20 பேர் காயம்:

அசாம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் குவாஹாட்டியில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அசாம் பேரிடர் மேலாண்மை வாரிய ஆணையர் மற்றும் செயலர் பிரமோத் குமார் திவாரி பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திபெத்திலும் நில அதிர்வு:

மணிப்பூரில் மையம் கொண்டிருந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் திபெத்திலும் உணரப்பட்டது. திபெத் தலைநகர் லாசா, நிங்சி, ஷான், காம்டோ ஆகிய பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், திபெத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்ப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

முதல்வர், உள்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் நிலநடுக்கம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் மற்றும் மணிப்பூரில் உள்ள மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் நிலைமையை கூர்ந்து கவனித்து தேவையான பணிகளை முடுக்கி விடுமாறு ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

குவாஹாட்டியில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ராஜ்நாத் உறுதி:

இதற்கிடையில் பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் பேசியதை சுட்டிக் காட்டிய ராஜ்நாத் சிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

(TH)

LEAVE A REPLY